பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் போட்டோ ஷுட் இன்று துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு முறை தன்னை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்துள்ளார். கபாலி போல, ரஜினியின் மாஸுக்கு ஏற்றது போலவும், நல்ல கதையம்சம் உள்ளது போலவும் ஒரு கதையை இந்த புதிய படத்திற்காக பா.ரஞ்சித் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மும்பையின் முன்னாள் நிழல் உலக தாதா ஹாஜி மஸ்தான் என்பவரின் வாழ்க்கையில் நடைபெற்ற சில சம்பவங்களை கதையில் ரஞ்சித் சேர்த்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதிய படத்தின் போட்டோ ஷுட், இன்று சென்னையில் துவங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மே 28-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று போட்டோ ஷுட் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டோ ஷுட்டில், ரஜினி நடிக்க உள்ள கதாபாத்திரம் குறித்த புகைப்படங்கள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் வெளியாகும் பட்சத்தில், ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.

முன்னதாக ஹாஜி மஸ்தானை நிழல் உலக தாதாவாக சித்தரித்து படத்தை இயக்கக் கூடாது என ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை ரஞ்சித் தரப்பில் இந்த ஹாஜி மஸ்தான் சர்ச்சை குறித்து எந்த விளக்கமும் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.