இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வில் பெரும் சாதனைகளை புரிந்து வருகிறது. உலகளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு போட்டியாக தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது.

கடந்த 2008ம் ஆண்டில் சந்திராயன்-1 விண்கலத்தை சந்திரனுக்கு இந்தியா அனுப்பியது. இந்த விண்கலம் சந்திரனை அடைந்து, கனிம மற்றும் நீர்வளம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அனுப்பியது. இதில் சந்திரனில் இந்த வளங்கள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

முக்கியமாக சந்திரனில் 10 மடங்கு எரிசக்தி கொண்ட எரிபொருளான ‘ஹீலியம்-3’ வாயு அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளது. இதனால் சந்திரனிலிருந்து ஹீலியம்-3 வாயுவை கொண்டுவருவது குறித்து இஸ்ரோ ஆலோசித்து வருகிறது.

மத்திய அரசு எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதம் அளவுக்கு குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், வரும் 2030க்குள் சந்திரனில் உள்ள ஹீலியம் – 3 வாயுவை பூமிக்கு கொண்டுவந்து, இந்தியாவின் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் உள்ளிட்ட எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய, இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

சந்திரனிலிருந்து எரிவாயு கொண்டுவந்துவிட்டால் உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நாடாகவும், கச்சா எண்ணைக்காக வெளிநாடுகளை நம்பி இருக்கும் நிலையும் ஏற்படாது.