ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நான் எதுவும் பேசவில்லை, இறந்த உடன் பேசுகிறேன் என்று சிலர் சொல்கிறார்கள், அது முற்றிலும் தவறானது என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நிஜவாழ்க்கையிலும் சரி, திரையிலும் சரி மனதிற்கு சரி என்று தோன்றுவதை பேசுவதை வழக்கமாக கொண்டவர். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், டுவிட்டரில் இயங்குவது, அரசியல் கருத்து சொல்வது குறித்த கேள்விக்கும் பதில் அளித்தார். டுவிட்டரில் மிகவும் வெளிப்படையாக பேசுகிறீர்கள், வலுவான அரசியல் கருத்துக்களை முன் வைக்கிறீர்கள். அதனால் விரைவில் அரசியலுக்கு உங்களை எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். இது போன்று கேள்வி எழுப்பும் மக்கள் என்னை பின்தொடரவில்லை என்று தான் சொல்வேன். நான் எப்போதும் அரசியலில் இருக்கிறேன். அது தான் பிரச்னை. நான் எழுதும் எல்லா கதைகளும் அரசியல் பின்புலம் கொண்டவை என்பதை யாராலும் உணரமுடியாது. தேவர் மகன் படம் மூலம் ஜாதி அரசியலின் அடுத்தப்பக்கத்தை காட்டியது.

அதே போல், ஜெயலலிதா உயிருடன் இருந்த போது நான் பேசவில்லை, கருத்து தெரிவிக்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ராஜ் கமல் பிலிம்ஸூக்கும், தமிழக அரசுக்கும் விஸ்வரூபம் வெளியீட்டின் போது வழக்கு நடந்தது. அதில் ராஜ் கமல் பிலிம்ஸ் வெற்றி பெற்றது. அதன்பின்னர் தான் விஸ்வரூபம் படத்தை வெளியிட்டோம். அதனால் எப்போதும் அரசியலில் இயங்கி கொண்டு தான் இருக்கிறேன் என்று கமல் கருத்து தெரிவித்துள்ளார்.