pawan-kalyan

மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் இவர்களுக்கு முன்பே நாகார்ஜுன், சிரஞ்சீவி என்று தெலுங்குப்பட ஹீரோக்களுக்கு தமிழ்ப்பட இயக்குனர்கள் மீது ஒரு ஸ்பெஷல் கண் உண்டு! அதிலும், பாகுபலிக்கு தமிழ்நாடு கொடுத்த மரியாதைக்கு அப்புறம், தமிழ்நாட்டு மேப்பை பிரித்து வைத்துக் கொண்டு சந்து பொந்தையெல்லாம் கண்காணித்து வருகிற அளவுக்கு பாச மலர்களாகிக் கிடக்கிறது தெலுங்கு ஹீரோக்களின் மனசு.

அந்த வரிசையில் தமிழ்ப்பட இயக்குனர் ஒருவருக்கு தங்க மேசை போட்டுக் கொடுத்திருக்கிறார் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யாண். அவர்தான் ஆர்.டி.நேசன். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தமிழ்ப்பட சூப்பர் ஹீரோ விஜய் இருவரையும் வைத்து ஜில்லா படத்தை இயக்கினாரே அவரேதான். தற்போது மூன்றாவது சூப்பர் ஸ்டாருடனும் கைகுலுக்கிவிட்டார் ஆர்.டி.நேசன்.

இப்படத்தை பிரபல தமிழ்ப்பட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இன்று ஆந்திராவில் நடந்த பூஜையில், சாய்பாபா ஆசியுடன் முதல் காட்சியை படம் பிடித்துவிட்டார்கள். ஹீரோ விஜய் தன் வாழ்த்துக்களை ஸ்பெஷலாக அனுப்பி வைத்தாராம் மூவருக்கும்!