பப்ளிசிட்டியா? ஆஸ்கர் நாயகன் போல் மேடையில் கோபப்பட்ட பார்த்திபன்.. வருந்தி வெளியிட்ட வீடியோ

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட சிலரில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். இவர் தற்போது இரவின் நிழல் என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு இருக்கிறது.

தொடர்ச்சியாக தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு புதுமையை செய்து வரும் பார்த்திபன் இந்த படத்திலும் இப்படி ஒரு புதுமையை செய்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், சமுத்திரகனி, மதன் கார்க்கி, கரு பழனியப்பன், ஷோபனா சந்திரசேகர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது பார்த்திபன், ஏ ஆர் ரகுமானுக்கு நினைவு பரிசாக அவரது தாய் மற்றும் தந்தை படம் இருக்கும் இசை வடிவ கேடயத்தை அளித்தார்.

அதன்பிறகு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும் போது பார்த்திபன் கையில் இருந்த மைக் வேலை செய்யவில்லை. அதனால் கோபமடைந்த அவர் மைக்கை கீழே வீசினார். பல முக்கிய நபர்களும் அந்த விழாவில் இருக்கும்போது பார்த்திபன் இப்படி நடந்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் உடனே தான் செய்த அந்த விஷயத்திற்கு அவர் மன்னிப்பு கேட்டு பேசினார். ஆனாலும் அந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பார்த்திபனுக்கு எதிராக பல விமர்சனங்களும் எழுந்தது. இந்நிலையில் பார்த்திபன் ஒரு பேட்டியில் தன்னுடைய செயல் குறித்து விளக்கமளித்து மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஏ ஆர் ரகுமான் அந்த மேடையில் இருப்பதால் ஒவ்வொரு விஷயமும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால் அப்படி நடக்கவில்லை. அதனால் அவருக்கு நான் மன்னிப்பு கேட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். அதேபோல் ரோபோ ஷங்கருக்கும் மன்னிப்பு கேட்டு அனுப்பினேன்.

இது மிகவும் எதார்த்தமாக நடந்ததுதான். பப்ளிசிட்டிக்காக நான் எதையும் செய்யவில்லை. அப்படி செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இந்த விஷயத்தை நான் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு இருப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்