ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும், கல்லூரிகளை மூடி விட்டால் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அழைத்துப் பேசிய தமிழக அமைச்சர்கள், மத்திய அரசுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்த போதிலும், போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் வியாழக்கிழமை காலை, மோடியைச் சந்தித்து, தமிழகத்தில் நடைபெறும் இளைஞர் போராட்டங்களை எடுத்துக் கூறி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த உள்ளார்.