திரையரங்குகள் இனி வேண்டாம், ஓடிடி போதும்.. கில்லி மாதிரி சொல்லி ஹிட்டடித்த 7 படங்கள்

கொரோனா காலக்கட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் உலகில் நடந்திருக்கின்றன. ஊரடங்கு நேரத்தில் இந்த உலகம் பல்வேறு முக்கிய மாறுதல்களை கண்டிருக்கிறது. அப்படி பார்க்கும்போது திரைத்துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது. படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தாலும் ஊரடங்கிற்கு முன்பாக படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வெளியாக தயாராக இருந்த பல படங்கள் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்ததால் வெளிவர முடியாமல் தேங்கி கிடந்த அந்த நேரத்தில், திரையரங்குகளுக்கு செல்ல முடியாத ரசிகர்கள் ஓடிடி எனும் தளத்திற்கு செல்ல ஆரம்பித்தனர்.

அதற்கு முன்பே அனைவருக்கும் பரிச்சயமான ஒரு தளமாக ஒடிடி இருந்தாலும் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில்தான் ஒடிடி பக்கம் மக்கள் அதிகம் சென்றனர். அப்படி ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த படங்களைப் பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

சார்பட்டா பரம்பரை: 2021 ஆண்டு, தமிழக குத்துச்சண்டை போட்டியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் அவரது நீலம் புரொடக்சன்ஸ் தயராரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான படம் தான் சார்பட்டா பரம்பரை. இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை என இரண்டு தலைமுறைகளுக்கு இடையேயான மோதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதைக்களம்.

அதில் நடக்கும் அரசியலையும் மிக ஆழமாக எடுத்து கூறியது. இந்த படம் முதலில் திரை அரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த படம் பின் அமேசான் பிரைமால் வாங்கப்பட்டு அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. பல்வேறு தரப்பிலும் பாராட்டப்பட்ட இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.மேலும், யதார்த்தமான திரைக்கதையை அமைத்த இயக்குனர் பா.ரஞ்சித்தை விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினர்.

சூரரை போற்று: ஒடிடி-யில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாது என்பதை உடைத்த நடிகர் சூர்யா தொடர்ந்து ஓடிடி பக்கம் படங்களை வெளியிட்டு திரையரங்க உரிமையாளர்களின் மனக்கசப்பையும் சம்பாதித்து இருந்தார். அப்படி அவர் வெளியிட்ட படங்களில் மிக முக்கியமான படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி இருந்தார்.இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமான நிறுவனத்தைத் துவக்கியவரான கோ. ரா. கோபிநாத்த்தின் உண்மை கதையை தழுவியது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் வரிசையில் அதிக கவனம் ஈர்த்த படமாக இது அமைந்தது. இந்த படம் பின்னர் கேரளத்தின் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது. சூர்யா ஜோதிகாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான படம் என்பதால் பல சிக்கலான பிரச்சினைகள் சந்தித்த பிறகு தான் இந்த படம் பின்னர் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

மண்டேலா: மண்டேலா 2021 ஆம் ஆண்டு வெளியான அரசியல் நையாண்டி திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் எழுதி, இயக்கி இருந்தார். இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க புது முகங்கள் பலர் நடித்துள்ளார்கள் . இரண்டு சாதிப் பிரிவினர் ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. முடிதிருத்தும் தொழிலாளியாக யோகி பாபு அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார் . இப்படம் நேரடியாக 2021 ஏப்ரல் 4 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாகவும், மறுநாள் சர்வதேச அளவில் Netflix மூலமாகவும் வெளியிடப்பட்டது.

லிஃப்ட்: 2021ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு திரில்லர் திரைப்படமாகும். இது வினீத் வரபிரசாத்தின் அறிமுக இயக்கத்தில் உருவானது. இந்த படத்தில் கவின், அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்து இருந்தனர். இது ஹாட் ஸ்டார் வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது. இந்த படத்தின் கதை மற்றும் இந்த படத்தில் நடித்த நடிகர்களின் எதார்த்தமான நடிப்புகாக வெகுவாக பாராட்டப்பட்டது .

திட்டம் இரண்டு: திட்டம் இரண்டு 2021ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கும் ஒரு திரில்லர் கதைக்களம். இதை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கி இருந்தார். சோனி லைவில் வெளியான இந்த படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்தியாவின் பல முக்கிய இதழ்கள், இந்த படத்தினை வெகுவாக பாராட்டி எழுதி இருந்தது. படத்தின் மேக்கிங் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பிற்காக விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

வினோதய சித்தம்: தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படமா என வியக்க வைத்த ஒரு படமாக வினோதய சித்தம் படம் அமைந்திருந்தது. நடுத்தர, வயதான கதாபாத்திரங்களை கதையின் நாயகனாகக் கொண்ட படங்கள் தமிழில் மிகவும் குறைவு. பழைய தமிழ் நாடகமான வினோதய சித்தம் எனும் நாடகத்தை தழுவி இந்த படம் வெளியானது. நச்சு வசனங்கள் சமுத்திரகனி, தம்பி ராமையா ஆகியோரின் நடிப்பு என படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டை பெற்றது. ZEE 5 ஒடிடி தளத்தில் இந்த படம் வெளியானது.

ஜெய் பீம்: தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஏன் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் தான் ஜெய் பீம். இந்த படம் சூரியாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் தா. செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின் பல விருதுகளும் இந்த படத்திற்கு கிடைத்தது. ஆஸ்கரின் கடைசி சுற்று தேர்வு வரை சென்ற பெருமையும் கிடைத்தது. பழங்குடியினருக்கு விதிக்கப்படும் அநீதியை எதிர்த்து போராடும் வழக்கறிஞர் எனும் கதைகளத்தில் இந்த படம் உருவாகி இருக்கும். தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்