தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் முதல்வர் பன்னீர்செல்வம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் அவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இதனையடுத்து, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கூவத்தூர் ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏ-க்கள் ஒரு மனதாக அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அதேபோல், அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அதிரடியாக நீக்கியுள்ளார்.

மேலும், கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்குள்ள ரிசார்ட்டில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏ-க்களை சந்திக்க சென்ற பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தஹ்டுது நிறுத்தப்பட்டனர். இதனால், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் தமிழகத்தில் நிலவும் சட்ட – ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார். அத்துடன், சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் ஆளுநரிடம் பன்னீர்செல்வம் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.