தமிழக முதல்வராக சசிகலா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ள சூழலில், தனக்கு ‘அரசியல், பதவி ஆசை இல்லை’ எனக் குறிப்பிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சசிகலா எழுதிய பழைய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

சென்னை, க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் மேற்கொண்ட தியானப் புரட்சியும் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அதிரடி பேட்டியும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்புக்கு முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தின் நகலை வெளியிட்டார்.

அந்தக் கடிதத்தில், “அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை. பொதுவாழ்வில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புகிறேன்” என சசிகலா எழுதியிருந்த வரிகள் மேற்கோள் காட்டப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

ஏற்கெனவே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்க் பேட்டியளித்த ஓபிஎஸ், கட்சித் தலைமை பதவியை அடைவதற்கும், முதல்வர் பதவியை அடைவதற்கும் சசிகலா காட்டும் அவசரம் தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் கடிதத்தின் புகைப்படம்: