முதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தவறு செய்ததாக ஒருபோதும் பெயர் வாங்கியதில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஒரு புரளியை சொல்லி வருகிறார்கள். காலம்தான் உரிய பதில் சொல்லும். சட்டசபை கூடியபிறகு எனக்கு உள்ள ஆதரவை எம்.எல்.ஏக்கள் நிரூபிப்பார்கள். ராஜினாமாவை திரும்ப பெற கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன்.

பொதுமக்களை வீதி வீதியாக சென்று, கிராமம், கிராமமாக, மாவட்ட வாரியாக சந்தித்து பேசப்போகிறேன் என்றார். தீபா குறித்த கேள்விக்கு, “அவர்கள் எல்லாம் மரியாதைக்கு உரியவர்கள். மாண்புமிகு அம்மாவுடைய அண்ணன் பிள்ளைகள். எப்போதுமே அவர்களுக்கு மதிப்பு கொடுத்துள்ளேன்” என்றார். உங்களுடன் இணைந்து பணியாற்ற தீபாவுக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு, “கட்டாயமாக” என கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.

இதன்மூலம், தீபா பக்கம் சாய்ந்த அதிமுக தொண்டர்களுக்கு இப்போது யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தீபா ஆதரவாளர்கள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். அதிமுகவை மன்னார்குடி குடும்பத்திடமிருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் விசுவாசி பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது.