எதற்காக இந்த சசிகலா எதிர்ப்பு? என்பது உட்பட பல கேள்விக்கு ஒரே மேடையில் பதிலளிக்கப் போகிறார் கமல்.

ஜெயலலிதா மறைந்தது முதல் தைரியம் வந்து விட்டது . முக்கியமாக தமிழ்சினிமா ஹீரோக்கள் பலர் தங்கள் கருத்தை படீர் திடீரென தெரிவிப்பதெல்லாம் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சித்தார்த் போன்ற சின்னப்பசங்கள் கூட தமிழகத்தை பார்த்து கேட்கிற அளவுக்கு நிலைமை படு சாதாரணம் ஆகிவிட்டது.

ஆனாலும் இவ்வளவு கூட்டத்திலும் கமல் பேச்சுக்கு மட்டும் கடும் ஆதரவு எழுந்திருக்கிறது மக்கள் மத்தியில். நாலு வரி சொன்னாலும் நறுக்குன்னு சொன்னாருடா என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஏன் கமல் சசிகலாவை எதிர்க்க வேண்டும்? அதற்கு வண்டி வண்டியாக பல காரணங்கள் இருக்கிறது. அதை தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

இப்போதைய பரபரப்பு என்ன தெரியுமா? ஓ.பி.எஸ்சை வெளிப்படையாக கமல் ஆதரிக்க முடிவெடுத்திருப்பதுதான். அவர் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துவங்கி வைக்க அலங்காநல்லூர் கிளம்பியதையும், அங்கிருக்கும் மக்கள் இவர் வருகையை எதிர்த்ததும் மக்கள் அறிந்த விஷயம்தான். அப்போது ஓ.பி.எஸ் சுக்கு என்னாகுமோ என்று தன் கவலையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் கமல்.

இப்படி இவரும் ஓ.பி.எஸ்சும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிக் கிடப்பது வெறும் அறிக்கைகளோடு போய்விடுமா என்று நினைத்தவர்களுக்கு அந்த பேரின்பத்தை தரப்போகிறாராம் கமல். எப்படி?

பிப்ரவரி 24 ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள். அன்று பிரமாண்ட மேடையமைத்து முழங்கப் போகிறார் ஓ.பி.எஸ். அந்த மேடைக்குதான் கமல் வரப்போகிறாராம். ஒரே மேடையில் ஓ.பன்னீர் செல்வமும் கமலும் அமர்ந்திருக்கிற அந்த காட்சி, தமிழகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகுதோ?