நாகினி, நந்தினி என பாம்புகள் படமெடுத்து ஆடி வரும் நிலையில் தற்போது குடும்ப சீரியல் என்று கூறப்பட்ட சரவணன் மீனாட்சி சீரியலிலும் தற்போது பேய்கள் உலாவரத் தொடங்கியுள்ளன.தொலைக்காட்சிகளில் மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசிடம் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அப்புகார்களை ஒலிபரப்பு உள்ளடக்கம் புகார்கள் கவுன்சிலுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.டிஆர்பிக்காக குடும்ப சீரியல்களை எடுப்பதை விட குட்டிச்சாத்தான்கள், பாம்புகள், பேய்களை வைத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டன சேட்டிலைட் சேனல்கள்.

மாமியார், மருமகள், அண்ணி, நாத்தனார் குடும்ப சண்டைகளை விட பாம்பு, பேய்களை பார்க்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் யோசித்ததன் விளைவே இது போன்ற சீரியல்கள் அதிகரித்த காரணம். இப்போது குடும்ப சீரியல்களிலும் ஆவிகளின் சேட்டை அதிகரித்து விட்டது.

சன்டிவியில் பிற்பகலில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு என்ற சீரியலில் அடுத்தவன் மனைவியை அடைய துடிக்கும் ஆவி ஒன்று அந்த பெண்ணின் கணவனின் உடம்புக்குள் புகுந்து கொண்டு அட்டகாசம் செய்கிறது. அதை தடுக்க இன்னொரு ஆவி முயற்சி செய்கிறது.

நள்ளிரவு நேரத்தில் படுக்கை அறை காட்சிகள் ஒளிபரப்பிய டிவி சேனல்கள் இப்போது பட்டப்பகலில் பகிரங்கமாக படுக்கை அறை காட்சிகளை ஒளிபரப்ப தொடங்கி விட்டன. இந்த காட்சிகளுக்கு சென்சார் எதுவுமில்லை. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இவற்றை பார்க்க வேண்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீலி தொடரில் பேய் வந்த நிலையில் தற்போது சரவணன் மீனாட்சி தொடரிலும் இப்போது பேய் ஓட்டத் தொடங்கி விட்டனர். உடனே கீழே ஒரு வரி ஓடுகிறது. இது கற்பனை காட்சிதான் என்றும் மூட நம்பிக்கையை வளர்ப்பது நோக்கமல்ல என்றும் ஓடுகிறது.

மீனாட்சியின் உடம்பிற்குள் பேய் புகுந்து கொள்கிறதா? அல்லது ஆவி அட்டகாசம் செய்கிறதா என்பது தெரியவில்லை. இதேபோல வம்சம் சீரியலிலும் வெள்ளை சேலை கட்டிய பேய் ஒன்று உலா வருகிறது. அந்த பேய் ஊர்வசிக்கு தலை பிடித்து விடுகிறது.

நந்தினி சீரியலில் பாம்பின் சீற்றம் ஒருபக்கம் இருக்க, குள்ள உருவம் கொண்ட குட்டி சாத்தான் மறுபக்கம் அட்டகாசம் செய்கிறது. கண்ணை உருட்டி காயத்ரி செய்யும் மந்திர உச்சாடனத்தை சில எபிசோடுகளாக பார்க்க முடியவில்லை தப்பித்தார்கள் டிவி சீரியல் ரசிகர்கள்.

தொலைக்காட்சிகளில் வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள் மீதான புகார்கள் மொத்தம் 10 வகையாக பிரிக்கப்படுகின்றன. சமூகநலன், மதச்சார்பின்மை, குழந்தைகளுக்கு எதிரானவை, தேசவிரோதம், நிறவேற்றுமை, ஆபாசம், முத்தக்காட்சிகள், நிர்வாணம், கலவரம், கிரைம் என இவை அனைத்தின் மீதும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு புகார்கள் வருகின்றன.

தற்போது திகில், மந்திர தந்திரங்கள், பேய், பில்லி சூனியம், பாம்புக் கதைகள் என மூடநம்பிக்கையை வளர்க்கும் தொடர்கள் மீது தற்போது புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. இவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படி பிசிசிசிக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது.

டிவி சீரியல்களில் பாம்புகளின் படையெடுப்பு ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பேய்களின் அட்டகாசம் ஆரம்பித்து விட்டது. ஆயிரக்கணக்கில் புகார்கள் குவிந்தாலும் இந்த சீரியல்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்போது இது போன்ற மூடநம்பிக்கை சீரியல்கள் முடிவுக்கு வருவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.