Entertainment | பொழுதுபோக்கு
பிரியா பவானி சங்கரை தொடர்ந்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிரபல நடிகை!
சின்னத்திரை நடிகர்கள் பலரும் வெள்ளித்திரையில் மின்னத் தொடங்கி விட்டனர். நம்ம சிவகார்த்திகேயன் கூட ஒரு காலத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர்தான். சந்தானம் தொடங்கி மா.கா.பா. ஆனந்த் வரை சின்னத்திரை டூ வெள்ளித்திரை பயணித்தவர்கள் பட்டியல் நீளம். அதேபோல், செய்தி வாசிப்பாளராகத் தனது மீடியா பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர், சின்னத்திரைத் தொடரில் நாயகியாக நடித்து பின்னர் மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமனார். அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவர் கார்த்தியுடன், கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
அந்த வகையில் சின்னத்திரையிலிருந்து மேலும் ஒரு நடிகை வெள்ளித்திரை ஹீரோயின் அவதாரம் எடுக்க இருக்கிறார். சன் டிவியின் வெற்றிகரமான தொடர்களில் ஒன்றான தெய்வ மகள் சீரியலின் நாயகியாக நடித்த வாணி போஜன்தான் அது. அந்த சீரியல் மூலம் தமிழகக் குடும்பங்களின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்ட வாணி, சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த `என் மகன் மகிழ்வன்’ (My son is a Gay) பட இயக்குநர் லோகேஷின் இரண்டாவது படம் மூலம் ஹீரோயினாக வெள்ளித் திரையில் அடியெடுத்து வைக்கிறார். இன்டிபென்டன்ட் பிலிம் மேக்கரான லோகேஷின் முதல் படம், சர்வதேச அளவிலான திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்தநிலையில், தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். என் 4 (N4) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நாயகியாக வாணி போஜன் நடிக்கிறார். சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள அந்த படத்தில் அனுபமா, அஃப்சல், விஷ்ணு உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். விரைவில் படத்தின் நடிகர்கள் முடிவு செய்யப்பட்டு ஷூட்டிங் தொடங்க உள்ளதாக இயக்குநர் லோகேஷ் அறிவித்திருக்கிறார். வெள்ளித்திரையிலும் கலக்குங்க வாணி!
