சட்ட விரோதமாக எம்எல்ஏக்களை கடத்தி வைத்திருக்கும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம் சக்தி சேகர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தலில் நாராயணசாமியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர் ஓம் சக்தி சேகர். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர் அவர்.

இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள ஓம் சக்தி சேகர் ஓபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்தார். இதனையடுத்து அவரை அதிமுகவில் இருந்து நீக்கி சசிகலா உத்தரவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஓம் சக்தி சேகரின் ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓம் சக்தி சேகர், தற்காலிக பொதுச் செயலாளர் சசிகலா, பதவி ஆசை கொண்டு ஓபிஎஸ்ஐ கட்டாயப்படுத்தி விலக வைத்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

தன்னை கட்சியில் இருந்து நீக்க சசிகலாவுக்கு எந்தவிதமான அதிகாரமும்,தகுதியும் என குறிப்பிட்டார். ஓபிஎஸ் க்கு எம்எல்ஏக்கள் முழு ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களை சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கடத்தி வைத்தக் கொண்டு சித்ரவதை செய்து வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து குற்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வரும் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என ஆவேசமாக கூறினார்.

ஓம் சக்தி சேகர் பிரபல திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.