பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர் மாரியப்பன், சேலம் மாவட்டத்தைச் சார்ந்தவர். இவருக்கு மத்திய மாநில அரசுகள் பாராட்டி பல கோடி ரூபாய் பரிசுகள் வழங்கின. பல முன்னணி நிறுவனங்கள் கார்களை பரிசுகளாக வழங்கின.

இந்நிலையில் 28 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கார் ஒன்றை மாரியப்பன் வாங்கியுள்ளார். இந்தக் காரை அவர் கிராமத்து வீட்டு முன்பு நிறுத்தியிருந்த போது, பெரியவடுகம் பட்டியை சதீஷ்குமார் என்பவர் தனது இரு வாகனத்தில் வந்து கார் மீது மோதி சேதப்படுத்தியுள்ளார்.

அதையடுத்து மாரியப்பனின் நண்பர்கள் சிலர் சதீஷ்குமார் வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் சதீஷ்குமார் இன்று அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்ட நிலையில் மர்ம மான முறையில் இறந்து கிடந்துள்ளார். சதீஷ்குமாரை மாரியப்பன் நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து மாரியப்பனிடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அடிவாங்கிய அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது.