பன்னீர் செல்வம் எடுத்துவரும் அதிரடிகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டையே பரபரப்பாக்கி வருகிறது. மன்னார்குடியிலிருந்து சசிகலா ஆதரவாளர்களான ஆயிரக்கணக்கானவர்கள் போயஸ் இல்லத்தில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில்தான் போயஸ் இல்லத்தையே அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறார் முதல்வராக சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் ஓ.பி.எஸ்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா வாழ்ந்த போயஸ் இல்லம் நினைவு இல்லமாக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லத்தையும் அவர் பயன்படுத்திய உடமைகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை தொண்டர்களாலும் அதிமுக விசுவாசிகளாலும் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜெயலலிதாவின் கார்கள் உட்பட எல்லாவற்றையும் சசிகலாதான் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் முதல்வர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட, நாளையோ அதற்கு மறுநாளோ போயஸ்கார்டனை அதிகாரபூர்வமாக அரசு அதிகாரிகள் கைப்பற்றும் முயற்சி நடக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

அதை தடுக்கதான் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் அங்கே குவிக்கப்பட்டு வருவதாகவும் பேச்சு. ஆனால் போலீஸ் கமிஷனரை மாற்றியிருக்கும் பன்னீர்செல்வம், தனது உத்தரவை நிறைவேற்ற சகல அதிகாரங்களையும் முடுக்கிவிடுவார் போல தெரிகிறது. இனி வரும் நாட்கள் அரசியல் களத்தில் மிக மிக சூடான நாட்களாக இருக்கப் போவது மட்டும் நிச்சயம்.