Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெரிய விபத்து அல்ல.. விளக்கம் அளித்தார் தனுஷ்

மாரி – 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்குப் பெரிய காயம் ஏற்படவில்லை என்றும், தான் நலமாக இருப்பதாகவும் நடிகர் தனுஷ் விளக்கமளித்திருக்கிறார். பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் மாரி. லோக்கல் டான் ஒருவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அனிருத் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் பேசப்பட்டது. கேங்ஸ்டராக நடித்த தனுஷ் வித்தியாசமான மீசை தாடியுடனும், நகைகள் அணிந்தும் நடித்திருந்தது அவரது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும், படத்தில் தனுஷ் அணிந்திருந்த கண்ணாடி பெரிய அளவில் பேமஸானது. தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ரோபோ ஷங்கர், விஜய் யேசுதாஸ், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களை ஏற்று இருந்தனர்.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது பாலாஜி மோகனே இயக்கி வருகிறார். மாரி 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷே நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்ட சாய் பல்லவி நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அவருடன் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். டோவினோ தாமஸ், இந்த படத்தில் தனுஷூக்கு வில்லனாக நடிக்கிறார். மாரி படத்தின் முதல் பாகத்தில் போலீஸ் வேடத்தில் விஜய் யேசுதாஸ் வில்லனாக மிரட்டியிருப்பார். அந்த வகையில், மாரி-2வில் டோவினோ தாமஸின் கதாபாத்திரமும் பேசப்படும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.
மாரி – 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கவில்லை, மாறாக யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு நடந்து முடிந்து இருப்பதாக தெரிகிறது. இந்த வருட இறுதிக்குள் படத்தின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து வந்தது. முக்கியமான சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது நாயகன் தனுஷுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால், பதறிப் போன படக்குழு ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தி, தனுஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. சீரியஸான காயம் இல்லை என்றாலும், தனுஷ் குணமடைய ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்பதால் ஷூட்டிங்கைத் தற்போது ஒத்திவைத்துள்ளனர். தனுஷுக்கு ஏற்பட்ட காயம் குறித்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கவலையை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில், தனக்கு ஏற்பட்ட காயம் பெரிய அளவுக்கு இல்லை என தனுஷ் விளக்கமளித்திருக்கிறார். தனக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து தற்போது மீண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தனுஷ், ரசிகர்கள்தான் தனது பலம் என்றும் அவர்களின் வேண்டுதலுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். தனுஷின் விளக்கத்தை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
