மெகா பட்ஜெட் இயக்குனர் ஷங்கர் தற்போது ரஜினியை வைத்து 2.O படம்  இயக்கி வருகிறார். ஷங்கரின் படத்தில் எப்போதும் பாடல் காட்சிகளுக்குத்தான் அதிக தொகை செலவழிக்கப்படும். ஆனால், ரஜினியை வைத்து இவர் இயக்கி வரும் படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும்தான் இடம்பெறுவதாக வெளிவந்துள்ள செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் இடம்பெறுகிறது என்பது பற்றி விசாரிக்கையில், படத்தை ஷங்கர் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப் போகிறாராம். அதனால், ஹாலிவுட் படங்களைப் போன்று பாடல்களே இல்லாமல் உருவாக்கப் போவதாகத்தான் முதலில் முடிவு செய்திருந்தாராம். பின்னால், தமிழ் சினிமாவுக்கு அது எடுபடாமல் போய்விடும் என்பதாலேயே ஒரு பாடலையாவது படத்தில் வைப்போம் என்று முடிவு செய்து தற்போது ஒரேயொரு பாடலை மட்டும் இப்படத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. மற்றபடி, ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. ரஜினியின் தற்போது உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சண்டைக் காட்சியிலாவது டூப் போட்டு நடிக்க வைக்கலாம். ஆனால், பாடல் காட்சியில் அப்படி செய்யமுடியாது. இதனால், அவரை கஷ்டப்படுத்தாமல் இருப்பதற்காக ஒரேயொரு பாடலை மட்டுமே படத்தில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.