ஒரே மாதிரி ட்யூன். ஒரே மாதிரி குரல்கள். பாடல் வரிகளும் கூட கிட்டதட்ட அப்படியே என்கிற அளவுக்கு ‘ரிப்பீட் பாய்’ ஆகிவிட்ட சந்தோஷ் மீது கடும் கோபத்திலிருக்கிறாராம் கார்த்தி. இனி நம்ம காம்பவுண்டுக்குள் சந்தோஷ் வர வேண்டாம் என்கிற அளவுக்கு இந்த கோபம் போய்விட்டது.

இந்த ‘கதவ சாத்து’ பாலிசிக்கு பின்புறத்தில் நடந்த உண்மையென்ன?

‘காஷ்மோரோ’ பட சமயத்தில், பின்னணி இசைக்காக பலமுறை கெஞ்ச வேண்டியிருந்ததாம் சந்தோஷிடம். ஒரு கட்டத்தில் இயக்குனர் கோகுலின் போனை எடுப்பதேயில்லையாம் அவர். சரி… அவர் கூப்பிட்டுதான் எடுக்கவில்லை. நாமே கூப்பிடுவோமே என்று நினைத்த கார்த்தி, தானும் ட்ரை பண்ண, கிட்டதட்ட பதினைந்து அழைப்புகளை நிராகரித்தாராம் மிஸ்டர் மியூசிக். நடுவில் போனை எடுத்து “நான் ஆஸ்திரேலியா கிளம்புறேன். வந்த பிறகுதான் ஆர் ஆரெல்லாம்” என்று முகத்திலடித்தார் போல கூற, இப்படியொரு பண்பாளரா என்று அசந்தே போனாராம் கார்த்தி.

அவசரம் அவசரமாக அவர் அடித்துக் கொடுத்த பின்னணி இசை படத்தின் பலத்தை மேலும் ஆட்டிப் பார்த்த கதையெல்லாம் ரசிகர்கள் அறிந்தவைதான். ‘அதுவும் அந்த சரித்திர பிளாஷ்பேக்கில் சந்தோஷின் பணி, சுத்த ஹம்பக்’ என்று விமர்சகர்களும் தங்கள் கருத்தை முன் வைத்துவிட்டார்கள். இதையெல்லாம் அனுபவித்த பின்புதான், இனி வேண்டவே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தாராம் கார்த்தி.

ரஜினி, விஜய் படங்களுக்கே மியூசிக் போட்டாச்சு. இனி கார்த்தியாவது… கமலாவது என்று கூட நினைத்திருக்கலாம்! யார் கண்டது?