Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-surya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர்களுக்கு ‘ரெட்’ போட விநியோகஸ்தர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு!?

சிந்தாமணி முருகேசன்-இந்தப் பெயர்,இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும் இளையதலைமுறைக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஒரு காலத்தில் நடிகர்களையும்,தயாரிப்பாளர்களையும் தெறிக்கவிட்டவர்! விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர். இவர் காலத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அவ்வப்போது ‘கட்டப் பஞ்சாயத்து’ நடந்ததுண்டு.

அதுவும் கூட, பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு பலத்த நஷ்டம் என்றால், விநியோகஸ்தர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்த வரலாறு கடந்த காலங்களில் உண்டு. இந்த வியாபாரக் ‘கணக்கை’த் தொடங்கி வைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. தன்னை நம்பி முதலீடு செய்தவர்கள் எந்தவகையிலும் பாதிக்கப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் செய்தார். ஆனால், அதைத் தற்போது ஒட்டுமொத்த நட்சத்திரங்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்ற முயற்சி நடக்கிறது என்பது காலக்கொடுமை!

என்னாச்சு? கமல், அஜித் தவிர பிற நட்சத்திரங்கள் நடித்த படங்களை இனி நாங்கள் வாங்கி ரிலீஸ் பண்ண மாட்டோம். முடிந்தால் அவர்களே எங்கள் ஊருக்கு வந்து தியேட்டர் எடுத்து ரிலீஸ் பண்ணிக்கட்டும். என்று தனிப்பட்ட முறையில் வாட்ஸ் அப் க்ரூப்பில் தகவலைத் தட்டிவிட்டிருக்கிறது ஒரு விநியோகஸ்தர் க்ரூப். இது இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத ஒன்று! ‘ஊர்ல போய் பொட்டிக்கடை வச்சுக்கூடப் பொழச்சுக்கிறேன்.. இந்த சினிமாவே வேண்டாம்’ என்கிற மனநிலையில் உள்ள சில தயாரிப்பாளர்களிடம் பேசினோம்.

ஒரு காலத்தில் படம் எடுத்து செல்வாக்காக இருந்த பல தயாரிப்பாளர்களின் பொதுவான மனநிலை மேலே உள்ள பாராவில் சொன்னதுபோல்தான் இருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் எவ்வளவு பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் பிரம்மாண்டமாக பூஜை போட்டு அடுத்துதான் படப்பிடிப்பே தொடங்கும்.அதற்குக் காரணம் – அப்போதுள்ள வியாபரமுறை.

படத்தின் காம்பினேஷனைப் பொறுத்து அந்தப் படத்திற்கு பெரும் தொகையை விநியோகஸ்தர்கள் அட்வான்ஸாகக் கொடுப்பார்கள். அதுவே ஓரளவுக்கு படத்தை எடுக்கப் போதுமான தொகையாக இருக்கும். அதன் பிறகு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வரும் விநியோகஸ்தர்கள், பாடல்காட்சிகளையும் ட்ரைலரையும் பார்த்துவிட்டு மீண்டும் ஒரு தொகையைக் கொடுத்துவிட்டுப் போவார்கள். அந்தப் பணத்தை வைத்து மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடிக்கிற அளவுக்கு உதவிகரமாக இருக்கும்.

பட பூஜையின் போது சாக்குப் பையில் மூட்டை மூட்டையாக பணத்தைக் கட்டி எடுத்துப் போவதை, ஏவி எம் பிள்ளையார் சாட்சியாக நானே பார்த்திருக்கிறேன். அதன் பிறகு படம் முழுமையாக ரெடியானதும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரம் நடக்கும்.இதுவரை கொடுத்தது போக மீதிப் பணத்தைக் கொடுத்திவிட்டு பெட்டியை எடுத்துப் போவார்கள்.

அன்று சினிமா அவ்வளவு ஆரோக்கியமாக இருந்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொடர்ந்து சினிமாவில் படம் எடுத்துக் கொண்டிருந்த பல பெரிய நிறுவனங்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு… சினிமாவைத் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால்,விநியோகஸ்தர்கள்! விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர குடும்ப அரசியலைப் போல் இப்போதும் கோடிகளில் புரண்டு கொண்டிருப்பதை மனசாட்சியுள்ள எவரும் மறுக்க முடியாது? மல்டி ஃப்ளக்ஸ் என்று சொல்லப்படும் தியேட்டர்கள் என்ன செய்கின்றன? டிக்கெட் விலையைவிட கேண்டீன்-பார்க்கிங்ல அடிக்கிற கொள்ளைதான் இங்கு அதிகம். இது தமிழகமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை எவராது மறுக்க முடியுமா!

இப்படி இருக்கும் பல திரையரங்குகள் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமானதாக அல்லது அவர்களது கட்டுபாட்டில் உள்ளதாகவே இருக்கின்றன. யாரோ ஒரு தயாரிப்பாளர் கோடிக்கணக்கில் வட்டிக்கு வாங்கிப் படம் எடுக்கிறார். காய்கறி மார்க்கெட்டில் பேரம் பேசுவதுபோல் பேசி…டிஸ்ரிப்யூசன் அல்லது எம்.ஜி எனச் சொல்லப்படும் மினிமம் கேரண்டி என்கிற அளவில்தான் பெரிய படங்களுக்கான வியாபார முறையாக இருக்கிறது.

இதில் மினிமம் கேரண்டி என்பது படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் சேஃப்டிக்கு கொண்டுவரப் பட்ட வியாபரத் தந்திரம். அதன் பிறகு படம் ஓடும்போது வருகிற லாபத்தில் வைக்கப்படுகிற பங்கு என்பது;குரங்கு ரொட்டித்துண்டை பங்கு போடுகிற மெதட். சிறு முதலீட்டில் தயாரான படங்களின் எண்ணிக்கையை விட்டுவிடுவோம்! ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் மொத்தப் படத்துக்கும் செய்யப்பட்ட முதலீட்டை கணக்குப் பார்க்க இந்தியாவின் ஆகச் சிறந்த பொருளாதார வல்லுநர் எனச் சொல்லப்படும் மன்மோகன் சிங்கே வந்தாலும் திகைத்துப் போவார்.

அந்தப் படங்களை வெளியில் கொண்டு வர எத்தனை விநியோகஸ்தர்கள் முன் வந்திருக்கிறார்கள்? கேட்டால்… நாங்க என்ன சமூக சேவை செய்யவா சினிமாவுக்கு வந்திருக்கோம் என்று சொல்வார்கள். அப்போ உங்களுக்கு எப்பவுமே ஜாக்பாட் அடிச்சுக்கிட்டே இருக்கணும்…நீங்க கொழுத்த லாபம் பார்க்க ரசிகனை சுண்டி இழுத்து தியேட்டருக்கு கொண்டு வர்ற நட்சத்திரம் வேணும்! கடந்த இத்தனை வருடங்களில் இந்த நட்சத்திரங்கள் நடித்த படங்களை வாங்கி நீங்கள் ஒருமுறைகூட லாபமே பார்த்ததில்லையா?! அவ்வாறு அதிகப்படியான லாபம் வந்தபோதெல்லாம் இந்த நடிகர் படத்தை வாங்கினதால்தான் எனக்கு இவ்வளவு லாபம்… இந்தாங்க உங்களோட பங்கு என்று எந்த நடிகருக்காவது ஒரு விநியோகஸ்தர் பிரிச்சுக்கொடுத்த வரலாறு இருந்தால் சொல்லுங்கள்!?

இந்த லட்சணத்தில் நட்சத்திரங்களுக்கு சவால் விடுவதற்கும் ரெட் போடுவேன் என்று சொல்வதற்கும் உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று ஆளுயரக் கண்ணாடி முன் நின்று நிதானமாகக் கேட்டுப்பாருங்கள்;உங்கள் மனசாட்சி சரியான பதில் வைத்திருக்கும்.

அதே நேரம் தயாரிப்பாளர்களும் இது குறித்து தீவிர விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும். பிற மொழிப் பட உலகிலும் இதுபோல் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள். எப்போதும் இவ்வளவு முரண்பாடுகள் வந்ததில்லை.

காலகாலமாக சினிமாவில் சொல்லப்படும் குற்றச்சாட்டு- நடிகர்களுக்கு அதிகப்படியான சம்பளத்தைக் கொடுத்து சினிமா இண்டஸ்ட்ரியைக் கெடுக்கிறார்கள் என்பது. அது உண்மை என்பதையும் உணரவேண்டும். அல்லது குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துவிட்டு, லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று வரைமுறை கொண்டு வரலாம்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. புதிதாகத் தேர்ந்தெடுக்கும் நிர்வாகிகளாவது இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அசாதாரமான சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம்; தமிழக அரசியலைப்போல!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top