நடிகையின் வலியும் வேதனையும் யாருக்கும் புரியாது – அனுஷ்கா

பாஹுபலி வெற்றியை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகைகளின் சிரமங்களை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் அனுஷ்கா.

ஒரு நடிகை என்றால் எல்லோருக்கும் ரொம்ப இளக்காரமாகிவிடுகிறது. ‘அவளுக்கென்ன நிறைய சம்பாதிக்குறா, சொகுசு வாழ்க்கை’ என சாதாரணமாக நினைக்கிறார்கள் அனால் அந்த இடத்திற்கு செல்ல அனுபவித்த வலியும் வேதனையும் எனக்குத்தானே தெரியும் என்கிறார் பாகுபலி நாயகி அனுஷ்கா.

பாகுபலிக்குப் பிறகுதான் அனுஷ்காவின் பர்சனல் பக்கங்களை அதிகம் புரட்டிக் கொண்டுள்ளன மீடியாக்கள். காதல், திருமணம், தோஷம் நீக்க பரிகாரம் என அனுஷ்கா பற்றி தினம் பல செய்திகள். அவரும் இப்போது மனம் விட்டுப் பேச ஆரம்பித்துவிட்டார். திருமணம் குறித்த கேள்விகளுக்கு ஒரேயடியாக நோ சொல்கிறார். “திருமணத்துக்கெல்லாம் நேரமே இல்லை. ஒப்புக்கொண்ட படங்களை முடிப்பதுவரை திருமணம் பற்றி யோசிக்க மாட்டேன்,” என்கிறார்.

வீட்டில் திருமணம் பேச்சு பற்றி கேட்டபோது, “அவர்கள் சீக்கிரமே திருமணம் செய்துகொள்ளும்படி எனக்கு நெருக்கடி கொடுப்பது உண்மைதான். திருமணத்துக்கு பிறகும் பலர் நடிக்கிறார்கள். அதுபோல் நீயும் திருமணம் செய்துகொண்டு நடிக்கலாம் என்பது அவர்கள் கருத்து. கைவசம் உள்ள படங்களை முடிப்பதுவரை திருமணம் பற்றி பேச வேண்டாம் என்று அவர்களிடம் கூறிவிட்டேன்,” என்றார்.

மேலும், நடிகைகளுக்கு கண்ணீர், கஷ்டம் எதுவும் இருக்காது என்று பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் சிறப்பாக நடித்து இருப்பதாக நடிகைகளைப் பலரும் பாராட்டலாம். அதற்கு பின்னால் இருக்கும் வலியும், வேதனையும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ‘மேக்கப்’ போடுவதற்காக மணிக்கணக்கில் நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து இரவு வீட்டுக்கு போனால் உடம்பு கடுமையாக வலிக்கும். அதை குடும்பத்தினரிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் என்று தனி அறைக்குள் இருந்து வேதனையால் அழுது இருக்கிறேன்,” என்கிறார் வெளிப்படையாக.

Comments

comments