வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மார்ச் 13ஆம் தேதி முதல் எந்த நிபந்தனையும் இன்றி பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இம்மாதம் 20 ஆம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்துக்கு 50000 ரூபாய் பணம் எடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு ரத்து நடவடிக்கையை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து வங்கிகளில் பணம் எடுக்கவும் டெப்பாசிட் செய்யவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பணமதிப்பு ரத்து நடவடிக்கை நடைமுறைக்கு வந்து 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன்படி மார்ச் 13ஆம் தேதிக்குப் பிறகு சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி வங்கிகளில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் எடுக்கும் தொகையின் உச்சவரம்பையும் ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி வரும் 20ஆம் தேதி முதல் வாரத்துக்கு 50000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.

தற்போது வரை வாரத்துக்கு 24000 ரூபாய் எடுக்கலாம் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.