2005-ம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கிய கற்க கசடற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் விக்ராந்த். அதன்பிறகு எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டியநாடு என பல படங்களில் நடித்தார். இந்நிலையில், தற்போது சுசீந்திரனின் கதை வசனத்தில் உருவாகும் வெண்ணிலா கபடிக்குழு-2, சுசீந்திரன் இயக்கும் இன்னொரு படம், சமுத்திரகனியின் தொண்டன் மற்றும் கவண் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்கள் பற்றி விக்ராந்திடம் கேட்டபோது, இப்போது நடித்து வரும் நான்கு படங்களிலுமே நல்ல வேடங்களில் நடிக்கிறேன். இந்த மாதிரி ஒரே நேரத்தில் நான்கு பெரிய படவாய்ப்புகள் கிடைக்குமென்று நான் நினைத்தே பார்க்கவில்லை. நல்ல டைரக்டர்களின் நல்ல படங்களில் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இவர்களில் சுசீந்திரன் எனக்கு குரு. சமுத்திரகனி எனது அண்ணன். என்னைப்பற்றி நன்றாக தெரிந்தவர்கள், நான் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பவர்கள். அதனால்தான் எனக்கு இந்த வாய்ப்புகளை தந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் நிறையவே கற்று வருகிறேன். நடிப்பு மட்டுமின்றி நிறைய நல்ல ஆலோசனைகளையும் தருகிறார்கள். அதனால் கதையையும், கதாபாத்திரத்தையும் உணர்ந்து நடித்து வருகிறேன்.

இருப்பினும், சினிமாவில் நான் நடிகனாகி 12 வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் எனக்கென ஒரு கமர்சியல் வட்டம் உருவாகவில்லை. நிறையவே போராடி விட்டேன். ஒவ்வொருமுறையும் எதிர்பார்த்து நிறைய ஏமாற்றங்களை கடந்து வந்திருக்கிறேன். அதன்காரணமாக, இப்போது எனக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. இயக்குனர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ… அதன்படியே நடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்த படங்கள் வந்தால் நான் பெரிய நடிகனாகி விடுவேன் அப்படி இப்படியெல்லாம் நான் கனவு காணவில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் கொள்ளாமல் இந்த படங்களில் நடித்து வருகிறேன். என் வேலை என்ன என்பதை உணர்ந்து செய்து வருகிறேன். அதற்கு என்ன பலன் கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கட்டும் என்கிறார் விக்ராந்த்.