‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். கோவில்பட்டியை சேர்ந்த இவர் துபாயில் வளர்ந்தவர். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். அடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்‘ மற்றும் ஒரு தெலுங்கு படம் ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வேறு சில வாய்ப்புகளும் வந்துள்ளன.

இது குறித்து நிவேதா பெத்து ராஜ் இடம் கேட்ட போது….

‘ ஒரு நாள் கூத்து’ படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. அதில் ஒன்றி நடித்ததால் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதைப்பார்த்து தான் ‘ பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்கள். எனது முதல் படத்தில் நாகரீக பெண்ணாக நடித்தேன். இந்த படத்தில் தேனி பகுதியில் உள்ள கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். நகரத்தில் வளர்ந்த எனக்கு கிராமத்து பெண்களுக்குரிய பாவாடை, தாவணி அணிந்து நடித்தது புதுமையாக இருந்தது. இந்த வேடத்தை ரசித்து நடித்திருக்கிறேன்.

அடுத்து ஜெயம் ரவியுடன் ‘டிக்.. டிக்.. டிக்’ படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இனி விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.