ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், தனக்கு ஜெயம் ரவி நடிப்பு கொடுத்ததாக கூறியுள்ளார்.

‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்த ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அடுத்து உதயநிதியுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இப்போது ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது விண்வெளியில் நடைபெறும் கதை.

இதுபற்றி கூறிய நிவேதா பெத்துராஜ், “எனக்கு ஜெயம் ரவியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த உடன் சந்தோ‌ஷத்தில் மிதந்தேன். பெரிய நடிகருடன் சேர்ந்து எப்படி நடிக்கப் போகிறோம் என்ற பயம் என்னை தொற்றிக் கொண்டது. இதனால் படப்பிடிப்புக்கு பயந்து கொண்டே சென்றேன்.

நான் நடித்த போது பல டேக் எடுக்கும் நிலை ஏற்பட்டது. அதை ஜெயம் ரவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எந்த மாதிரி நடிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்தார். நான் நடிக்கும் போது என்ன தவறு செய்தாலும் அதை பொறுத்துக்கொண்டு, அவர் பொறுமையாக நடித்தார். ஜெயம் ரவி துளிகூட பந்தா இல்லாதவர். மிகவும் எளிமையான இயல்பான நடிகர். அவருடைய இந்த நல்ல குணம், எனக்கு அவர் மீது இருந்த மரியாதையை பல மடங்கு உயர்த்தி விட்டது” என்றார்.