‘கடைசியாக நீங்கள் பணம் கொடுத்து பொருள் எப்போது பொருள் வாங்கினீர்கள்’ என்று ஸ்வீடனைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டால் அவருக்கு நினைவுக்குக் கூட வராது. ஏனெனில் ஸ்வீடன் நாட்டில் எல்லாமே கார்டு மூலம்தான். டெபிட், கிரெடிட் கார்டு மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைதான் அனைத்தும். பணமில்லா பரிவர்த்தனைக்கு உலகுக்கே ஸ்வீடன்தான் எடுத்துக்காட்டு. ஸ்வீடனைப்போல் பணமில்லா பரிவர்த்தனை இந்தியாவில் சாத்தியமில்லை. ஆனால், அதற்கான ஒரு முன்னோட்டம்தான் பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு என்கின்றனர் நிபுணர்கள்.

ஸ்வீடனில் தெரு வியாபாரிகள், வாடகை கார், சர்ச் நன்கொடை, செய்தித்தாள் சந்தா, அன்றாட செலவுகள் என அனைத்து இடங்களிலும் கார்டு மெஷின் பயன்பாட்டில் இருக்கிறது. எல்லமே கார்டு வழி பேமென்ட்தான். இதனால் கறுப்புப் பணம், கள்ள நோட்டுப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போது ஸ்வீடன் நாட்டில் 93 சதவிகிதம் பணமில்லா பொருளாதாரம்தான். வரும் 2020-25ம் ஆண்டிடுக்குள் ஸ்வீடன் முற்றிலும் பணமில்லாத பரிவர்த்தனை நிறைந்த நாடாக மாறிவிட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் எதற்காக இப்படி?

இந்தியாவில் 2016, செப்டம்பர் மாத கணக்கீட்டின் படி, ஒட்டுமொத்த பணப்புழக்கம் 17 லட்சம் கோடி ரூபாய். அதில், 86 சதவிகிதம் 500, 1000 ரூபாய் நோட்டுகளாகவே இருந்தன. மீதி 100, 50, 20 மற்றும் 10 ரூபாய் நோட்டுகள். இதுவே 15 ஆண்டுகளுக்கு முன் இந்திய பொருளாதாரத்தில் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் பணப் புழக்கத்தில் 70 சதவிகிதமாக இருந்தது. இப்போது வெறும் 14 சதவிகிதம் என்றளவிலேயே உள்ளது. 500, 1000 ரூபாய் நோட்டுகள் பணப்புழக்கத்தைப் பொறுத்தவரை 2001ல் வெறும் 25 சதவிகிதம் என்றளவிலேயே இருந்தது. இப்போது 86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் கறுப்புப் பணமாகவும், கள்ள நோட்டாகவும் உள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே வருமான வரியைச் செலுத்துவதாக வருமான வரித்துறை அலுவலகம் தெரிவிக்கின்றது. ஆகப் பயங்கரவாதம், கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க வேண்டும். வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து அரசின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது.

இந்தியாவில் சாத்தியமா?

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு இதுவரை வங்கிக் கணக்கே வைத்திருக்காதவர்களுக்கு இது பெரும் பிரச்னையாக இருக்கலாம். ஆனால், அனைவரையும் வங்கிப் பரிவர்த்தனை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அரசின் முக்கிய நோக்கமே. இந்தியாவில் 60 சதவிகித மக்கள் கிராமத்திலேயே வசித்து வருகின்றனர். இந்தியாவில் இன்னும் பல்வேறு கிராமப்புற மக்கள் ஸ்மார்ட்போன் அல்லது தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தெரியாதவர்களாகவே உள்ளனர். இந்தியாவில் 100 கோடி பேர் மொபைல் சந்தாதாரர்களாக உள்ளனர். ஆனால், இவற்றில் வெறும் 25 கோடி அளவுக்கே ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை முழுவதும் பண பொருளாதார நாடு. இந்தியாவில் 92 சதவிகிதத்துக்கும் மேல் ஒழுங்கமைக்கப்படாத துறைகளிலே பணிபுரிகின்றனர். இவர்கள் தங்களுடைய சம்பளத்தை பணமாகவே பெறுகின்றனர். இந்தியாவில் கிராமப்புற பொருளாதாரமே பண பரிவர்த்தனையில்தான் நடக்கிறது. ஆனால், அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் பணமில்லா பொருளாதாரத்தையே ஊக்குவித்து வருகிறது.

பணமில்லா பொருளாதாரம்!

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு கள்ளநோட்டினை ஒழிக்குமே தவிர கறுப்புப் பணத்தை ஒழிக்காது. இல்லாவிட்டால் புதிய நோட்டிலும் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க முடியாது. இதற்கு ஒரே வழி பணமில்லா பொருளாதாரம்தான். இதற்காக 10,000 அல்லது 20,000 ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் பணத்துக்குப் பதிலாக கார்டாக செலுத்த வேண்டும் என்ற அதிரடி அறிவிப்பினை அரசு விரைவில் அறிவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

இது குறித்து கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் பேசினோம். “இந்தியாவில் ஆதார் கார்டு வழங்குவதைப்போல் அனைவருக்கும் மணி கார்டுபோல் ஏதாவது ஒரு வகையிலான பணமில்லா பரிவர்த்தனையை கொண்டு வருவதற்கான முயற்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் மத்திய அரசு ஆட்சி அமைத்தவுடன் ஆரம்பத்திலேயே அனைவருக்கும் வங்கி கணக்கு என்ற திட்டத்தை கொண்டு வந்தனர். இது திட்டமிட்ட அணுகுமுறை. 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு ஏவுகணைத் தாக்குதல்.

பொதுவாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அனைவரும் அறிந்திருப்பர். அதுபோலவே ‘மணி கார்டு’ என்பது வங்கி வழிமுறைகளின்படி அனைத்துப் பரிவர்த்தனைகளும் நடைபெறுவதுதான். எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பது இருக்கும். செலவளிப்பவர்களின் அனைத்து விவரங்களையும் அரசு அறிந்துகொள்வதற்காகத்தான் இந்த மணி கார்டு. மணி கார்டு என்பது ஒரே கார்டாக வைக்க முடியாது. அது சாத்தியமில்லை.

30 கோடி பேருக்கு இல்லை!

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் மணி கார்டு எனும் நடைமுறை மிகவும் சவாலானதே. ஏனெனில் இப்போதைய கணக்கீட்டின்படி, இந்தியாவில் 30 கோடி பேருக்கு மேல் வங்கிக் கணக்கு இல்லை. இந்த 30 கோடியில் பெரும்பாலோனோர் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்.

இந்தியாவில் மணி கார்டு பிரைவேட் பப்ளிக் பார்ட்னர்சிப் முறையில் கொண்டு வரலாம். அதற்காக ஒரே ஒரு அட்டையாகக் கொண்டு வர மாட்டார்கள். வங்கிகளின் துணையுடன், வங்கிகளின் வழிமுறைகளின்படி மணி கார்டுகள் வழங்கப்படலாம். உதாரணத்துக்கு, 10,000 ரூபாய்க்கு மேல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும், அந்தப் பொருளுக்கு வங்கி வழிமுறைகளின் படி டெபிட், கிரெடிட் கார்டுப்போல் ஏதாவது ஒரு பணமில்லா பரிவர்த்தனை மூலம் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலைமை நிச்சயம் வரலாம்.

விரைவில் வரலாம்!

அமெரிக்காவில் அனைவரிடமும் 10 டாலர் (இந்திய மதிப்பில் 670 ரூபாய்) மட்டுமே கையில் இருக்கும். மற்றபடி அனைவரிடமும் 2 அல்லது 3 கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பர். அமெரிக்காவில் கையில் இருந்து காசு எடுப்பதே தேவையில்லை. பெரும்பாலும் அனைத்துப் பரிவர்த்தனையும் கார்டு மூலமாகத்தான் நடைபெறும். இப்பொழுது இதுவரை இருந்த கறுப்புப் பணத்தை ஒரு வழியாகக் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆனால், மீண்டும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பணமில்லா பரிவர்த்தனை மிகப் பெரிய அளவில் உதவும். இதற்காக ரூ.10,000க்கு மேல் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் பணத்துக்குப் பதிலாக கார்டாக செலுத்த வேண்டும் என்ற நடைமுறை விரைவில் வரலாம். அதை நோக்கியே மத்திய அரசின் ஒவ்வொரு அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டே உள்ளன. ஒரு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்த பிறகு கூடிய விரைவிலோ அல்லது ஒரு சில ஆண்டுகளில் இந்த நடைமுறையும் நிச்சயம் வரலாம்” என்றார்.

மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினையடுத்து தினம் தினம் ஏதாவது ஒரு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இவையனைத்தும் பணமில்லா பரிவர்த்தனையின் நோக்கிய பயணமே. அரசின் அறிவிப்புக்கு முன்னர் பணமில்லா பரிவர்த்தனைக்கு கொஞ்சம், கொஞ்சமாக நம்மை நாமே தயார் படுத்திக்கொள்வதே நல்லது.