Connect with us

Cinemapettai

சினிமாவிலிருந்து அடுத்த முதல்வராக வர தகுதி உடையவர்கள், கமல் சாரும், அஜித் சாரும் மட்டுமே.! சுசீந்திரன் ட்வீட்.!

Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவிலிருந்து அடுத்த முதல்வராக வர தகுதி உடையவர்கள், கமல் சாரும், அஜித் சாரும் மட்டுமே.! சுசீந்திரன் ட்வீட்.!

சினிமா துறையில் இருந்து அடுத்த தமிழக முதலமைச்சராக வர தகுதி பெற்றவர்கள் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அஜித் என, இயக்குனர் சுசீந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் அவருக்கு கந்துவட்டி கொடுமை அளித்ததே அதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, ‘நான் கடவுள்’ திரைப்படம் சமயத்தில் நடிகர் அஜித்தும் அன்புச்செழியனால் இத்தகைய கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளானார் என பரபரப்பு தகவலை அளித்தார். மேலும், நடிகர்கள், இயக்குனர்கள் என பலரும் அன்புச்செழியனால் கந்துவட்டிக் கொடுமைக்கு ஆளானதாக தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துவந்த சுசீந்திரன், இதனை சினிமா துறை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

ajith kamal

இந்நிலையில், தன் ட்விட்டர் பக்கத்தில், “சினிமா துறையில் அடுத்த முதல்வராக வருவதற்கு தகுதி பெற்றவர்கள் நடிகர் கமல் சாரும், அஜித் சாரும்”, என சுசீந்திரன் பதிவிட்டுள்ளார்.

 

‘எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன்’ – அசோக் குமார் எழுதிய உருக்கமான கடிதம்

‘எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன்’ என தான் எழுதிய உருக்கமான கடிதத்தில் தெரிவித்துள்ளார் அசோக் குமார்.

சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகியான அசோக் குமார், கடன் பிரச்னை காரணமாக இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததாலேயே தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள விஷயங்களை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

‘என்னை கோழை, சுயநலக்காரன் என்று எதுவேனும் சொல்வீர்கள். எனக்கு இரண்டு வழிதான் இருந்தது. 1. கொலை, 2. தற்கொலை. கொலைகாரன் ஆகும் தைரியம் இருந்தாலும், கொலை செய்யப்படுபவர் குடும்பம் பாவம். நல்ல பெற்றோர், நல்ல உடன்பிறந்தோர், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் இருந்தும், நான் அவர்களுக்கு நல்ல மகனாகவோ, சகோதரனாகவோ, கணவனாகவோ, தகப்பனாகவோ இல்லை.

எனக்கு, சசிகுமார் கடவுளைவிட நல்ல முதலாளியாக இருந்தான். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரமும் கொடுத்தான். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும். ஆனால், அவனுக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்பு படத்தையும் சரியான தேதியில் வெளியிட்டோம். நாங்கள் செய்த பெரிய பாவம், ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். வேற்று ஆட்களை வைத்துக்கொண்டு என் வீட்டுப் பெண்கள், பெரியவர்களைத் தூக்கி வருவேன் என்றார். யாரிடம் உதவி கேட்பது? அதிகார வர்க்கம் (காவல்துறை), அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா பெடரேஷன் தலைவர் செல்வின் ராஜ் என சகலமும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு, அவரைத் தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே…

எனது உயிரினும் மேலான சசிகுமாரா… என்னால், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சகிக்க முடியவில்லை. உன்னை அவர்களிடம் இருந்து மீட்பதற்குத் திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு. நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக்கொள். என்னைப்போல் நீ கோழை ஆகிவிடாதே.

எத்தனையோ பேரை வாழவைத்த நீ, கண்டிப்பாக நல்லபடியாக வாழவேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி, என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய். நீ சுயம்பு. என்னைக் காப்பாத்தாத கடவுள், உன்னையும், நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் அன்புச்செழியன் போன்ற சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை.

எனக்கு வாழத் தகுதி இல்லையா? வாழ வழி இல்லையா? என்று தெரியவில்லை. அதனால், எனது சாவை நானே தற்கொலை மூலம் தேடிக்கொள்கிறேன்.

அப்பா, அம்மா, சின்னத்தாயி, ராஜப்பா, வனிதா, அர்ச்சனா, சக்தி, ப்ரார்த்தனா, சித்து, சாத்விக் நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டாம். சட்டென்று மறந்துவிடுங்கள். இதுவரை உங்களுக்கு எதுவும் செய்யாத என்னை, உங்கள் நினைப்பில் இருந்து தூக்கி எறியுங்கள். 43 வருஷம் யாருக்கும் பயன் இல்லாத ஒரு ஜந்து போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். சசியை பார்த்துக் கொள்ளுங்கள். அவன் பாவம், அவன் குழந்தை.

எதிலும் ஜெயிக்காத நான், எனது தற்கொலையில் தோற்க மாட்டேன் என்று நம்புகிறேன்’. இப்படிக்கு பா. அசோக் குமார் என்று கையெழுத்திட்டு, அடைப்புக் குறிக்குள் ஆங்கிலத்தில் முழுப்பெயரையும் எழுதியுள்ளார்.

பின்னர், முக்கியக்குறி போட்டு பின்வருபவற்றை எழுதியிருக்கிறார் அசோக் குமார். ‘யாரேனும் ஜி.என்.அன்புச்செழியனுக்கு சொல்லுங்கள். அதிகாரம், அரசு எல்லாவற்றையும் அவர் சமாளிக்கலாம். தனியே இருக்கையில் என்றேனும் தனது மனசாட்சியுடன் பேசச் சொல்லுங்கள். (இந்தக் கடிதம் கூட வெளியே தெரியாமல் அழிக்கும் வித்தை அவருக்குத் தெரியும். நீடூழி வாழ்ந்துவிட்டு அவர் மட்டும் இருக்கட்டும்)’ என்று எழுதி, மறுபடியும் கையெழுத்திட்டுள்ளார்.

அதற்கு கீழே, (என் உடம்பில் உள்ள தழும்புகள் கடந்த சில காலமாய் எனக்கு நானே ஏற்படுத்துக் கொண்டது) என்று குறிப்பிட்டு, அதன் கீழும் தமிழில் கையெழுத்திட்டுள்ளார் அசோக் குமார். இந்தக் கடிதம், படிப்பவர்கள் நெஞ்சைக் கலங்க வைக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top