‘ஊருக்குள்ள சக்கரவர்த்தி. ஆனா உண்மையிலேயே மெழுகுவர்த்தி’ என்று ஒரு ரஜினி பாடல் இருக்கிறதல்லவா? அந்த பாட்டுக்கு மறுபடியும் ஒரு வர்ணம் அடிச்சா, அதில் இனிகோ பிரபாகருக்கும் ஒரு இடம் இருக்கும்!

பார்ப்பதற்கு 100 சதவீத ஹீரோ மெட்டீரியல்தான் இனிகோ. அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் இனிகோவின் இனிஷியலை ஊருக்கு சொன்னப்படங்கள்! ஆனால் இப்பவும் வெற்றி இதோ அதோ என்று பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் விரைவில் வெளிவர இருக்கும் வீரையன் படம் இனிகோ பிரபாகரின் சினிமா வாழ்வில் சிறகுகளை பிக்ஸ் பண்ணும் என்று நம்பலாம். அப்படி நம்பக்கூடிய விதத்தில் இருந்தது அப்படத்தின் பாடல்கள். எஸ்.அருணகிரி இசையில் திரையிடப்பட்ட பாடல்களில் பருத்திவீரன் களவாணி படங்களின் மணம்! “பாடல்களை கேட்கும்போது களவாணி பீல் இருந்திச்சு” என்றார் அங்கு வந்திருந்த ‘சுந்தரபாண்டியன்’ பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவ்வளவும் நடந்த இடம் வீரையன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா.

சிறப்பு விருந்தினர்களாக சுமார் ஒரு டசன் பேர் வந்திருந்தாலும், சீனுராமசாமியின் பேச்சில் செம டச்! “இனிகோ பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனுக்காகதான் நான் இங்கு வந்தேன். இப்போது இருக்கிற முன்னணி ஹீரோக்களுக்கு நிகரானவன்தான் தம்பி. வருங்காலத்தில் எனக்கும் இனிகோவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நிச்சயம் நடக்கும்” என்றார்.

vijaysethupathy inigo prabhakaranஉண்மையில், சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் இனிகோதான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்ததாம். விஜய்சேதுபதியின் முதல் படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் இவரைதான் நடிக்க அழைத்திருக்கிறார் சீனு. “அப்போது ‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கப்புறம் வந்த மூன்று படங்களிலும் என்னால் நடிக்க முடியாமல் போனதற்கு வேறு வேறு காரணங்கள் உண்டு” என்றார் இனிகோ.

அந்த வேறுவேறு காரணங்களுக்கு காரணம், விஜய்சேதுபதிதான் என்று விழாவுக்கு வந்திருந்த சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது.

வீரையன் படத்தை ஃபாரா சரா பிலிம்ஸ் சார்பில் இயக்கி, தயாரித்திருக்கிறார் பரீத்! களவாணி படத்தின் முக்கிய தூண்களில் இவரும் ஒருவர் என்கிறார்கள். அப்ப… சந்தோஷமா வெயிட் பண்ணலாம்!