திமுக ஆட்சியில் இருந்தபோதே கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கு சினிமாவில் எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக உதயநிதியும் தயாநிதி அழகிரியும் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வந்தனர். இருவர் மீதும் சில குற்றசாட்டுகளும் எழுந்தன.

ஆனால் கருணாநிதியின் இன்னொரு பேரனான அருள்நிதி அப்படி அல்ல. எந்த புகாரிலும் சிக்காமல் தான் உண்டு தன் நடிப்பு உண்டு என்று சொந்த பேனரில் நடித்து வந்தார். ஆனால் அவரையே புது தலைவர் மிரட்டினார் என்ற ரீதியில் தகவல் வருகிறது.

இரண்டு பவர்ஃபுல் பதவிகளில் இருக்கும் இந்த தலைவர் வரும் 30 ஆம் தேதி முதல் ஸ்ட்ரைக் என்று அறிவித்தார். இது தவறான முடிவு என்று எல்லா புறங்களில் இருந்தும் எதிர்ப்பு வருகிறது. அருள்நிதி நடித்திருக்கும் பிருந்தாவனம் படத்தை 26 ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதற்காக போன் செய்தபோது தலைவர், அருள்நிதியிடம் ரிலீஸை தள்ளி வைக்க சொன்னாராம். அதற்கு அருள்நிதி ஏன் இந்த ஸ்ட்ரைக்? என்று கேட்டதாகவும் பதிலுக்கு, ‘என்ன நீ.. நான் இருக்கற போஸ்டிங்கைப் பார்த்து அவனவன் ஆடி போய் சொன்னதைச் செய்யறான்.. நீ வெட்டியா கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கியே.. சொன்னதை செய்ப்பா…’ என்று சொன்னதாகவும் செய்தி வந்தது. இந்த பேச்சின் ஆடியோ ரிலீஸாகி திமுகவினரிடையே பரவி வருவதாகவும் செய்தி வந்தது.

இது குறித்து கேட்க அருள்நிதிக்கு தொடர்பு கொண்டோம். வந்த செய்தியில் பாதிதான் உண்மை என்று மட்டும் சொல்லிவிட்டார். அப்ப பாதி உண்மை இருக்கு? ஆடியோ பப்ளிக்கா வந்தா மீதி தெரிந்துவிடும்!