புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சென்னையில் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் முக்கிய எதிர்ப்புக்குக் காரணம்.

நெடுவாசல் கிராம மக்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பல்வேறு அமைப்பினரும் நெடுவாசலில் முகாமிட்டு போராட்டத்தை வலுப்பெற செய்துள்ளனர். நெடுவாசலில் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் குவிவதை தடுக்க 7 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.

நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

இது தொடர்பாக உளவு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தி உள்ளனர். இதனையடுத்து சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல மாணவர்கள் எரிவாயு திட்டத்துக்கு எதிராகவும் கூடி விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் கவனமுடன் உள்ளனர். இதற்காக மெரினாவிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மார்ச் 2ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர் மாணவர் அமைப்பு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

மார்ச் 2ஆம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.