படத்தின் புரமோஷனுக்கு ஹீரோயின்கள் வந்துவிட்டால் மட்டும் மோசமான படத்தை ஓடவைக்க முடியுமா? என நடிகை நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “நான் விழாக்களில் புரமோஷன்களில் கலந்து கொள்வதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு சொல்கிறார்கள்.

எனக்கென்று சில கொள்கைகளை வைத்திருக்கிறேன். தயாரிப்பாளர் என்னிடம் கதை சொல்ல வரும்போதே நான் விழாக்களில் கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்லிவிடுகிறேன்.

00 தொலைக்காட்சிகளின் முன்பு அமர்ந்து படத்தைப் பற்றிய ஒரே விஷயத்தை எல்லோரிடமும் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இன்று எல்லாமே மாறிவிட்டது. டிஜிட்டல் மயமாகிவிட்டது. வித்தியாசமான விளம்பர உத்திகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. தனி ஒருவன், மாயா போன்ற படங்களை நான் விளம்பரப்படுத்தியுள்ளேன். சிறிய படங்களுக்கும், நான் கட்டாயம் விளம்பரம் செய்தே ஆகவேண்டிய சமயங்களிலும் நான் என்னால் முடிந்தவற்றைச் செய்கிறேன்.

ஆனால் நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்வதால் ஒரு மோசமான படத்தை ஓடவைக்க முடியாது. ஒரு படம் எவ்வாறு விளம்பரம் செய்யப்படுகிறது என்பதை விட, அதன் கதை நன்றாக இருந்தால்தான் ஓடுகிறது. ஒரு மோசமான படத்தை 100 நாள்கள் விளம்பரம் செய்தாலும் தோல்விதான் மிஞ்சும்.

பட விழாக்களில் கலந்துகொள்ளாத நடிகைகளைத் தண்டிக்கவேண்டும் என்று விவேக் சார் சொன்னது என்னைப் பற்றித்தான். கடைசிப் பகுதிச் சம்பளத்தைத் தராமல் விட்டுவிட்டால் நடிகைகளுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மை என்னவென்றால் என்னுடைய சம்பளத்தைப் பல சமயங்களில் விட்டுக்கொடுத்துள்ளேன். சில படங்களுக்கு என் சம்பளத்தைக் குறைத்துள்ளேன். இந்த விவகாரத்தில் விவேக் போன்றவர்களே கேள்வி எழுப்புவது கவலை அளிக்கிறது,” என்றார்.