‘ஒங்க காம்பினேஷன்ல கம்பிய வச்சு சொருக…’ என்று நொந்து நோக்காடு ஆகிற அளவுக்குதான் பல காம்பினேஷன்கள் இருக்கும்! உதாரணத்திற்கு விஜய் அஜீத் சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களே கூட வடிவேலு சூரிகள் வேண்டாம் என்று முடிவு செய்து சதீஷ் மாதிரியான ‘வறண்ட மண்ணுக்கு’ வாய்ப்பு கொடுப்பதைதான் ‘கேடு கெட்ட காம்பினேஷன்’ என்று கெட்ட வார்த்தையால் அர்ச்சிக்கிறது ரசிகன் மனசு. சிரிப்பே தராத சிரிப்பு நடிகர்கள் வரிசையில் முன்னணியில் இருக்கும் சதீஷுக்கும், திரைக்கு வந்தாலே தியேட்டரை கலங்கடிக்கும் சூரிக்கும் ஒரே டாப்பில் வாய்ப்பு கிடைக்கிறதே… அது மட்டும் எப்பிடிய்யா? என்று பேஸ்த் அடித்துப் போகிறான் அதே ரசிகன்.

விட்டுத் தொலைங்க. நாம் சொல்லப் போகிற விஷயமே வேற. லேடி சூப்பர் ஸ்டார் (?) நயன்தாராவை அண்மையில் சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம் சிவகார்த்திகேயன். இது வேலை மெனக்கட்ட சந்திப்புதான். ஏன்? தனது தயாரிப்பாளர் நண்பர் ஒருவருக்காகதான் நயனை சந்தித்தார் அவர். “நான் இப்போ சொல்லப் போற தயாரிப்பாளருக்கும் புது இயக்குனருக்கும் நீங்க கால்ஷீட் தரணும். உங்களோட படம் ஃபுல்லா சூரியும் இருப்பார். தியேட்டரே தெறிக்கிற அளவுக்கு காமெடி படம் அது” என்றாராம்.

சிவாவே சொல்லியாச்சு. அப்புறம் என்ன? அன்றே கதை கேட்க நேரம் ஒதுக்கிய நயன், பளபளவென கால்ஷீட்டுகளை அள்ளிக் கொடுத்துவிட்டார். இந்தப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியே சூரிதான் என்றும் கதைக்கிறது ஊர் ஒலகம்!