ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக, கட்சியை கைப்பற்ற அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொண்டார் சசிகலா. இதற்கு தொடக்கம் முதலே அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அதிமுக தொண்டர்கள் ஆதரித்தனர். அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா, முதல்வர் நாற்காலியை கபளீகரம் செய்யும் நடவடிக்கையில் இறங்கினார்.

இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. சசிகலா எந்த நேரத்திலும் முதல்வராகலாம் என கூறப்பட்ட நிலையில் புதிய திருப்பமாக ஓ. பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சசிகலாவுக்கு எதிரான ஓ. பன்னீர்செல்வத்தின் பகிரங்க அதிரடியால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சட்டசபை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பலரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தற்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்.