Tamil Cinema News | சினிமா செய்திகள்
தாத்தா வழியில் நாகேஷ் பேரன் பிஜேஷ்
1964ம் ஆண்டு வெளிவந்த படம் சர்வர் சுந்தரம். இதில் நாகேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். சாதாரண ஓட்டல் சர்வர் எப்படி ஒரு திரைப்பட நட்சத்திரமாக வளர்கிறார் என்கிற கதை. கே.பாலச்சந்தரின் கதையை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார்கள். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இதில் நாகேஷ் ஓட்டல் சர்வராக வேலை பார்க்கும் காட்சிகள் எல்லாம் கோல்டன் காமெடிகள்.
இப்போது அதே சர்வர் சுந்தரம் என்ற டைட்டிலில் சந்தானம் நடிக்கும் படம் ஒன்று உருவாகிறது. இதில் நாகேஷ் நடித்த மாதிரியான காமெடி காட்சியில் அவரது பேரனும் ஆனந்த பாபுவின் மகனுமான பிஜேஷ் நடித்து வருகிறார். சர்வர் சுந்தரம் படக்குழுவினர் தலைப்பு கேட்டு ஏவிஎம் நிறுவனத்தை அணுகியபோது அதற்கு அனுமதி கொடுத்த ஏவிஎம் நிறுவனம் “நாகேஷ் குடும்பத்திடமும் ஒரு அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள்” என்றது. அதன்படி ஆனந்த்பாபுவிடம் அனுமதி கேட்கச் சென்றபோது… அங்கு நாகேஷ் சாயலில் இருந்த பிஜேஷை நடிக்க வைப்பது என்று முடிவு செய்து அதற்காக ஒரு கேரக்டரை உருவாக்கினார்கள். ஓட்டல் சர்வராக இருக்கும் சந்தானத்தின் நண்பன் கேரக்டர் அது.
தற்போது அந்த கேரக்டரில் தாத்தா நாகேஷ் போன்று பேரன் பிஜேஷ் பிரமாதமாக நடித்து வருவதாக கூறுகிறார்கள். நாகேஷ் போன்ற உடல் மொழி அவருக்கு வருகிறது. சர்வர் சுந்தரம் டீசரில் கூட கஜேஷ் காப்பி டபாரா செட்டை வரிசையாக அடுக்கி வருவது போன்ற காட்சியை வெளியிட்டுள்ளார்கள். இதேப்போன்ற ஒரு காட்சியில் நாகேஷ் நடித்திருந்தார். இது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு நல்ல நடிகனாக பிஜேஷூக்கு நல்ல எதிர்காலம் இருக்கு என்கிறார்கள்.
நாகேஷின் மற்றொரு பேரனும் ஆனந்த பாபுவின் இளைய மகனுமான கஜேஷ், கல்கண்டு என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு சரியான வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். பிஜேஷூக்கு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
