nadigar sangam

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கணக்கு விவரங்களை அனைவரும் பார்க்கும் வகையில் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்தய் நடிகர் சங்கத்தின் வரவு, செலவு கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களும்http://www.nadigarsangam.org/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகாராய நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அப்போது அந்நிகழ்ச்சியில் தலைவர் நாசர், பொதுச் செயலர் விஷால், துணைத் தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் உள்ளிட்டோர், உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கினர்.

 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், நடிகர் சங்கத்தில் ஊழல்கள் நடைபெறுவதாக சிலர் வேண்டுமென்றே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. நடிகர் சங்கத்திற்கு திரட்டப்பட்ட நிதி மூலம் எவ்வளவு கடன் அடைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தொகை வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான அனைத்து விவரங்களும் தங்களிடம் தெளிவாக உள்ளது. இந்த வரவு, செலவு கணக்குகள் முதலில் நடிகர் சங்கத்தில் வெளியிடப்பட்ட பின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும் என கூறினார். அதேபோல் இன்று சங்கத்தின் பொருளாளர் கார்த்தி அனைத்து விவரனகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அடுத்த ஆண்டு (2017) ஜனவரி மாதம் நடிகர் சங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என்றும், வருகிற நவ. 27ல், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், லயோலா கல்லுாரியில் நடைபெறும் என்றும் சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.