என்.கே.விஸ்வநாதன்  இணைந்த கைகள், ஜெகன் மோகினி உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவருமான என்..கே.விஸ்வநாதன் நேற்று  காலமானார்.

இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்திய அளவில் டூயல் ரோலில் அதாவது ரெட்டைவேடம் படங்கள் எடுப்பதில் கைதேர்ந்த மேதை ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதன்.
சட்டம் என் கையில், கமல் இரட்டை வேடங்களில் நடித்த படம். எந்த கிராபிக்ஸ் வசதிகளும் இல்லாத அன்றைய கால கட்டத்தில் மிக அழகாக இரண்டு கமல்களும் மீட் பண்ணும் காட்சிகள் துல்லியமாக படமாக்கப்பட்டிருக்கும்.
அதைவிட இந்திய சினிமாவில் முதன் முதலில் இரண்டு கமல்களும் கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டிருப்பது இடம் பெற்ற படம்.
கமலுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் இவர். பாரதிராஜா போன்ற மூத்த இயக்குனர்களின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தார்.
விருந்தோம்பல் என்றால் என். கே.வி என்று திரையுலகம் கொண்டாடும். மதுரையில் இருந்து திடீரென்று குடம் குடமாக அயிரை மீன்கள் வரவைத்து திரையுலக நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்.
அதேபோல நண்பர்களுக்கு பாரம்பரியம் உள்ள கலைப் பொருட்களை வாங்கி பரிசாக அளிப்பார்.
ஷங்கர் ஜீன்ஸ் படம் பண்ணும்போது அதில் வரும் இரட்டைவேட காட்சிகள் ஷூட் பண்ண இவர் பங்களிப்பு பெரும் உதவியாக இருந்தது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
மறைந்த இயக்குனர் ராமநாராயணன் படங்களின் ஐம்பது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து சாதனை படைத்தார். மிக இலகிய மனம் படைத்தவர் என்.கே. விஸ்வநாதன்.
இந்நிலையில், என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார். ஆழ்ந்த இரங்கல்கள்.