Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனது தங்கைகள் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் – ஜி.வி
தமிழ் சினிமாவின் இளம் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நீட் பாடத்திட்டம் என் தங்கைகள் அனிதா மற்றும் ப்ரதீபா உயிர்களை வாங்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனையாக வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில், மாணவர்களின் எமனாக வந்திருக்கிறது நீட். மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்திய அளவிலான போட்டி தேர்வான நீட்டில் வெற்றி பெற்றால் மட்டுமே கல்லூரியில் சேர இடம் பிடிக்கும். இது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது தமிழக மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. தமிழகத்தில் தனியார் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் படித்து தான் வருகிறார்கள். அவர்களால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்.
இதை கேட்டு தான் இரண்டு வருடமாக, தமிழகத்தில் பெரும் பிரச்சனை எரிந்து வருகிறது. நீட் வேண்டாம் என சொல்லவில்லை. அதற்கேற்ப பாடத்திட்டத்தையும், பயிற்சியையும் அதிகப்படுத்த வேண்டும் தானே. கூலி வேலை செய்யும் பெற்றோரால் எப்படி பல லட்சம் கட்டி நீட் மையத்தில் சேர்க்க முடியும். இது தான் இன்றைய தமிழகத்தில் ஒலித்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்த கருத்து.
கடந்த வருடம், உச்சநீதிமன்றம் வரை சென்று நீட் வேண்டாம் என போராடிய மாணவி அனிதா கடைசியில் உயிரை மாய்த்து கொண்டார். அவரின் இறப்புக்கு பலர் அஞ்சலி செலுத்தி நீட்டிற்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த வருட நீட் தொடக்கமே பெரும் பிரச்சனையோடு தான் எழுந்தது. தமிழக மாணவர்களுக்கு பல மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்ட பல கட்ட மன உளைச்சலில் தேர்வு எழுதினர். இந்த வருட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பிரதீபா என்ற மாணவி தோல்வியடைந்துள்ளதால், விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு பலர் ஆழ்ந்த இரங்கலையும், நீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.
இதுகுறித்து, கண்டனம் தெரிவித்து இருக்கும் ஜி.வி.பிரகாஷ், ‘தகுதி பெறுவதற்கான முறையான பயிற்சி அளித்தபின் போட்டிக்கு அழைத்திருக்க வேண்டும். எனது தங்கைகள் அனிதாவும் பிரதீபாவும் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர். பல கனவுகளோடு படித்த எம் மாணவர்களின் உயிர்வலி உணர மறுப்பதும் குற்றமே…” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் முக்கிய பிரச்சனைக்கு தனது குரலை மறக்காமல் பதிவு செய்து வருபவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
