இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படமான ‘பைரவா’ படத்தை அடுத்து அவர் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், முதல்கட்டமாக இந்த படத்தின் இசையமைப்பாளரை அட்லி தேர்வு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய்-அட்லி இணைந்த ‘தெறி’ படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான் இந்த படத்திற்கும் இசையமைப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. கிட்டத்தட்ட ‘தெறி’ கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறவுள்ளதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.