சமூக வலைத்தளம் மூலம் பழகி, பெண்களை போதைக்கு அடிமையாக்கியதாக மதத்தலைவர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஷிபு சன்ஸ்கிரிதி என்ற மத அமைப்பின் தலைவராக சுனில் குல்கர்ணி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் தன்னை மனநல மருத்துவர் என்றும் கூறிக்கொள்கிறார். இந்நிலையில் இவர் தங்களது மகள்களை போதைக்கு அடிமையாக்கி, தன்னுடைய பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வருவதாக மூன்று தம்பதிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் தங்களுடைய மகள்கள், தங்களிடம் வராமல் சுனிலுடன் இருந்து வருவதாகவும் அவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கி வரும் சுனில், அதன் மூலம் தன் மகள்களை தன் பக்கம் இழுத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் படித்தவை:  சென்னை, மும்பை, ஹைதராபாத் விமானநிலையங்கள் எச்சரிக்கை

இந்த வழக்கு நேற்று மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, தாங்கள் சுனில் குறித்து கடந்த ஆண்டு இரண்டு முறை புகார் அளித்ததாகவும், ஆனால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த மூன்று தம்பதிகளும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அளித்த புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என காவல்துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

காவல்துறையினரின் அசட்டையான செயல்பாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், “முதலில் அவர்கள் கொடுத்த புகார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.அதன் பின்னர் குற்றவாளியை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இது மிகப்பெரிய பாலியல் மோசடி போல தெரிகிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் சி.பி.ஐ அல்லது சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டி இருக்கும்.” என கடுமை காட்டினர்.

அதிகம் படித்தவை:  ஆபாச படத்தை வெளியிடுவேன்: மிரட்டிய மாணவருக்கு சிறை

இதனைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய காவல்துறையினர், சுனில் மீது 9 காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்து,அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.