Tamil Nadu | தமிழ் நாடு
ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தால் 10 நிமிடத்தில் மீட்கக் கூடிய தொழில்நுட்பம் தேவை
ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தால் அதை 10நிமிடத்தில் மீட்க கூடிய தொழில் நுட்பம் தேவை என அறம் பட இயக்குனர் கோபி நாயினார் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2வயது குழந்தை சுஜித்துக்காக தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று மாலை தவறி விழுந்த குழந்தை இதுவரை மீட்கப்பட வில்லை.
குழந்தையை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்து அதை மீட்கும் முயற்சிகளை அறம் என்ற படம் மூலம் காட்டியவர் கோபி நயினார் . அவர் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது மிகவும் வேதனையான சம்பவம். எளிய மக்களின் துயரங்களைப் போக்குவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை. தனிநபரின் சாகசங்கள் மக்களை பாதுகாக்காது என்ற கட்டத்திற்கு நாம் வந்து விட்டோம்.
தொழில்நுட்ப முயற்சிகளாலும் குழந்தையை மீட்க முடியாது என்றபோது கூட்டு முயற்சியால் தான் நாம் வெற்றி பெற வேண்டும். முன்னெச்சரிக்கையாக நாம் இருந்திருக்க வேண்டும் . இது போன்று பல முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தால் அந்த குழந்தையை 10 நிமிடத்தில் மீட்கக் கூடிய தொழில் நுட்பம் நமக்கு வேண்டும். ஆழ் கடலில் விழுந்த விமானத்தை தேடும் தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது . ஆனால் 68 அடி ஆழத்தில் உள்ள குழந்தையை மீட்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை என்பது வேதனையான விஷயம் என்றார்.
