‘உயிர கொடுத்து படம் எடுக்கிறோம். ஆனா உட்கார்ந்த இடத்துல இருந்துக்கிட்டு நோகாம நோம்பு கும்புடுறானுங்க’ என்றொரு விமர்சனம் காலம் காலமாக விமர்சகர்கள் மீது இருந்து வருகிறது. ‘முடிஞ்சா நீயும் ஒரு படத்தை எடுத்து காட்றா…. ’ என்று கொந்தளிக்கும் அத்தனை சினிமா படைப்பாளிகளும், “சினிமாவை அழிக்கிறதே இவனுங்கதான்” என்று பொத்தாம் பொதுவாக பிரச்சனையை தூக்கி விமர்சகர்கள் தலையில் வைக்கிற கொடுமையும் நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இயக்குனர் சாய்ரமணி, தமிழ்டாக்கீஸ் மாறன் மீது கொலை வெறியில் இருக்கிறார் என்பதுதான் ஹாட் டாபிக்.

உதவி இயக்குனர்களுக்காக போடப்பட்ட தனி ஷோவில் பேசிய சாய் ரமணி, “நான் ஒரு கமர்ஷியல் படம் எடுத்துருக்கேன். மக்களும் தியேட்டர்ல வந்து படத்தை பார்த்து ரசிச்சுட்டு போறாங்க. இந்த புளுசட்டைக்காரன் மட்டும் படத்தை பார்க்க போகாதீங்கன்னு சொல்றான். இதனால் இன்னும் நல்லா ஓடவேண்டிய படம் பாதிக்கப்படுது. இத்தனைக்கும் அந்தாளு இயக்குனர் சங்கத்தில மெம்பரா வேற இருக்கான்”.

“இவ்வளவுக்கு பிறகும் அந்தாளு நம்ம சங்கத்துல மெம்பரா இருக்கறதை அலோ பண்ணலாமா? (கூடவே கூடாது என்று அங்கு வந்த உதவி இயக்குனர்கள் கூச்சலிடுகிறார்கள்) அந்த புளூ சட்டையை சங்கத்திலிருந்து நீக்க கோரி ஒரு மனுவை எழுதி அதை இயக்குனர் சங்கத்தில் கொடுக்கப் போறேன். எல்லாரும் அதில் கையெழுத்து போடுங்க” என்று கேட்டு வாங்கி சங்கத்தில் கொடுத்திருக்கிறார்.

சங்கம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. ஒருவேளை கடும் ஆத்திரத்திற்குள்ளாகி மேற்படி புளு சட்டை ஆசாமியை சங்கத்திலிருந்து நீக்குவதுடன், “சங்க உறுப்பினர்கள் யாரும் எதிர்காலத்தில் புளு சட்டைப் போடக் கூடாது. அவர்கள் இயக்கும் படத்திலும் ஹீரோக்கள் யாரும் புளு சட்டை போட்டிருப்பது போல காட்சிகள் இருக்கக் கூடாது” என்று சொல்லுமோ?

இருக்கிற எரிச்சலை பார்த்தால், சொன்னாலும் சொல்லும்!