நியூசிலாந்துக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி பயிற்சியின் போது, தோனி அடித்த சிக்சர் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்கின்றன.

 

இத்தொடரின் லீக் போட்டிகளுக்கு முன், இந்திய அணி பயிற்சி போட்டியில், நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் ’டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 38.4 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 

 
சுலப இலக்கை துரத்திய இந்திய அணி, 26 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோலி (52), தோனி (17) அவுட்டாகாமல் இருந்தனர். ஆனால் தொடர்ந்து மழை நீடித்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, இந்திய அணி, 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதில் தோனி, பவுல்ட் பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்தார், ஆனால் நேராக கைக்கு வந்த பந்தை, பவுண்டரி லைனில் இருந்த கிராண்ட்ஹோமே கோட்டைவிட்டது மட்டுமில்லாமல், அதை சிக்சருக்கும் அனுப்பிவிட்டார். இதைப்பார்த்த எல்லா வீரர்களும் சிரிக்கதுவங்கிவிட்டனர். தோனியும் லேசாக சிரித்தார்.

 

இதையடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ, தோனி அதிர்ஷ்டம் காரணமாகத்தான் இன்னும் இந்திய அணியில் நீடிக்கிறார் என்றும் கருத்துக்களை ரசிகர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.