தமிழகத்தில் 4 நாட்கள் ஸ்டிரைக்கிற்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. டிக்கெட் விலையுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்த்து டிக்கெட் விலை இன்று அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி என இரட்டை வரி முறையை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3ம் தேதி முதல் திரையரங்குகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் வேலுமணி, வீரமணி, கடம்பூர் ராஜூ ஆகியோருடன் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இருதரப்பிலும் குழுக்கள் அமைத்து, சினிமா துறையினர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பேசப்படும் என்று கூறப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக திரைப்பட உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து தற்காலிகமாக திரையரங்கு ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டது. இன்று முதல் திரையங்குகள் வழக்கமாக இயங்கும் என்று உறுதியளித்தனர்.

டிக்கெட் விலையுடன் சேர்ந்து ஜிஸ்டி வரியும் இன்று முதல் வசூலிக்கப்படும் . புதிய சினிமா டிக்கெட் விலை நிலவரங்கள்:

120 ரூபாய் டிக்கெட் (மல்டிபிலக்ஸ்) – 153 ரூபாய்
100 ரூபாய் டிக்கெட் – 128 ரூபாய்
90 ரூபாய் டிக்கெட் – 106 ரூபாய்
50 ரூபாய் டிக்கெட் – 56 ரூபாய்

டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் கூடுதலாக ரூ. 30 செலுத்த வேண்டும் . இனி ஒரு குழந்தை மட்டும் கொண்ட குடும்பம் மல்டிப்பிலக்ஸ் தியேட்டருக்கு சென்றால் ரூபாய் 1,239 செலவாகும்.