அண்ணன் இருக்க பயமேன்.. ஜெயம் ரவிக்கு 6இல் ஐந்து சூப்பர் ஹிட் கொடுத்த மோகன் ராஜா

தற்போது வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாற வேண்டுமென தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த முதல் படத்திலிருந்து தோள் கொடுத்து நிற்கும் அவருடைய அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, தம்பியை கதாநாயகனாக வைத்தே 6 படத்தை  இயக்கி, அதில் 5 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

ஜெயம்: 2002 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சதா கதாநாயகியாக நடித்திருப்பார். இதில் கல்லூரி மாணவனாக ஜெயம் ரவி தோன்றி இளம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

இந்தப்படத்திற்கு இவருக்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே தன்னுடைய பெயருக்கு முன்பு ஜெயம் என்ற பெயரை சேர்த்துக் கொண்டார். இதில் ஜெயம் ரவி-சதா இருவருக்கும் இடையே இருக்கும் காதல் காட்சி இன்றும் ரசிகர்களை ரசிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இப்படி ஜெயம் ரவிக்கு அண்ணன் மோகன் ராஜா இந்தப் படத்தின் மூலம் பிள்ளையார் சுழி போட்டு சிறந்த வழிகாட்டியாக இருந்திருக்கிறார்.

எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி: இயக்குனர் மோகன் ராஜா மீண்டும் தனது தம்பி ஜெயம் ரவியை வைத்து, 2004 ஆம் ஆண்டு இயக்கிய மற்றொரு படம் தான் இந்த படம். இதில் தந்தையால் ஒதுக்கப்பட்ட அம்மா-மகன் இருவரின் பாசத்தை அழகாக தத்ரூபமாக காண்பிப்பார்கள்.

இதில் மகனாக ஜெயம் ரவி தனது தாய்க்கு அன்பான மகனாக அட்டகாசமாக நடித்திருப்பார். இப்படி ஒரு மகன் இருந்தால் எப்படி இருக்கும் என படத்தைப் பார்ப்போரையே பொறாமைப்படும் அளவுக்கு கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடம் மேலும் பிரபலம் அடைந்தார். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அசினும், அம்மாவாக நதியா சிறப்பாக நடித்திருப்பார்கள்.

உனக்கும் எனக்கும்: மீண்டும் மீண்டும் தன்னுடைய தம்பியை வைத்து இயக்கிய இயக்குனர் மோகன் ராஜா, இந்தப் படத்தில்தான் ஜெயம் ரவியை ஹீரோவாக வேற லெவலில் காட்டியிருப்பார். இதில் ஜெயம் ரவி அமெரிக்காவில் வந்த பையனாக, கிராமத்து பெண் திரிஷாவை காதலித்து அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ஜெயம்ரவியை ரசிகைகள் காதல் மன்னனாகவே இந்த படத்தின் மூலம் ஏற்றுக்கொண்டனர்.

சந்தோஷ் சுப்பிரமணியம்: 2008 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய வெளியான இந்தப் படத்தில் ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஜெயம் ரவி மற்றும் பிரகாஷ்ராஜ் இருவருக்கும் இடையே இருக்கும் தந்தை-மகன் உறவை சுற்றி படமாக்கி இருப்பார்கள்.

வெகுளித்தனமாக இருக்கும் காதலி ஜெனிலியாவை தன்னுடைய குடும்பத்திற்கு மருமகளாக்க வேண்டுமென ஜெயம் ரவி படும்பாடு, அதற்காக குடும்பத்தினரிடம் ஏற்படும் அவ பேரு இதையெல்லாம் சமாளித்து எப்படி காதலில் வெற்றி பெறுகிறார் என்பதை ஜெயம்ரவி எதார்த்தமாக நடித்துக் காண்பித்தார்

தில்லாலங்கடி: அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி இந்த படத்தில் அல்டிமேட் நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். ‘கிக்கு வேண்டும் கிக்கு வேண்டும்’ எனக் கூறிக்கொண்டு, இவர் சட்டத்திற்கு எதிராக இருக்கும் கருப்புப் பணத்தை லாபகரமாக எடுத்து, அதை அனாதை இல்லத்திற்கும், ஏழை-எளிய குழந்தைகளுக்கும் உதவுவார்.

இதையெல்லாம் போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி தில்லாலங்கடி ஆக தர லோக்கலாக வேலையைப் பார்த்தார். இதில் துருதுருவென தன்னுடைய நடிப்பை வித்தியாசமாக வெளிக் காட்டினாலும், இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

தனி ஒருவன்: 150 கோடி பாக்ஸ் ஆபீசை குவித்த வெற்றிப்படமான இந்தப்படத்தில் ஜெயம் ரவி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார். இதில் வில்லனாக அரவிந்த் சாமியும், கதாநாயகியாக நயன்தாராவும் நடித்திருப்பார்கள்.

இதில் ஜெயம் ரவி பொறுப்புள்ள அதிகாரியாக சமுதாயத்தில் நிகழும் அத்தனை அநீதிகளுக்கும் யார் ஆணிவேர் என்பதை துப்பு துலக்கி வேரறுத்திருப்பார். இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியால் இயக்குனர் மோகன் ராஜா மீண்டும் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் எடுக்க முடிவெடுத்திருக்கிறார்.

இப்படி, சில இளம் நடிகர்கள் வாய்ப்பு தேடி இயக்குனர்களை கெஞ்சிக் கூத்தாடும் நிலை எல்லாம் ஜெயம்ரவிக்கு ஏற்படாமல், அண்ணன் இருக்க பயமேன் என அவருடைய படங்களையே ஏணியாக பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்