Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய்க்கு வந்ததை உளறாதீர்கள்! பாஜகவினருக்கு மோடி கடும் எச்சரிக்கை.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வர வர அனைவரும் வாய்க்கு வந்ததையும், கண்டதையும் பேசி வருகின்றனர். அதிலயும் ஹெச் ராஜா,எஸ் வி சேகர் லாம் வரம்பு மீறியும் பேசி வருகின்றனர். இப்ப அதுக்கெல்லாம் ஒரு பூட்டு. நாடுதழுவிய அளவில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜகவினர் உளறிக் கொட்டுவதால் மக்களிடம் கட்சியின் மதிப்பு சீர்குலைந்து வருவதாகவும், பொதுப் பிரச்சினைகளில் வரம்பு மீறி பேச வேண்டாம் என அக்கட்சி எம்.பி.களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
சமீபகாலமாகப் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் ரீதியான தாக்குதல்கள், கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரத்தில் காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார், அதேபோல உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 5 பேரால், மைனர் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்தும், முறையான நீதி வழங்கக்கோரியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, கண்டனம் தெரிவித்தார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளும், கட்சி எம்.பி.க்களும் பல்வேறு கருத்துக்களை பேசி வருகின்றனர். இது மத்திய அரசையும், பாஜகவையும் சங்கடப்படுத்தி வருகிறது. பாஜகவினரின் இந்த கருத்துக்களை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்த வருகின்றன.
இந்நிலையில் பாஜகவினர் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என பிரதமர் மோடி கடும் உத்தரவிட்டுள்ளார். நாமோ ‘ஆப்’ வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பாஜக எம்.பிக்களிடம் அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறாம். ஊடகங்களின் கேமரா முன்பு நாம் ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் வார்த்கைகளை கொட்டுகிறோம். இது நம்மை சிக்க வைத்து விடுகிறது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் என எந்த பிரச்னைகளை எடுத்துக் கொண்டாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் ஊதி பெரிதாக்கப்படுகின்றன.
இதை பற்றிய கொஞ்சமும் கவலையின்றி நாம் நமது கருத்துக்களை கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே இதுபோன்ற அர்த்தமற்ற கருத்துக்கைள கூறுவதையும், ஆர்வக்கோளாறில் கருத்துக்களை தெரிவிப்பதையும் நாம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் அவர்களது பணியை செய்யட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பும், பாஜகவினரின் வரம்பு மீறிய பேச்சுக்களால் மத்திய அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டபோது இதேபோன்ற உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
