போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரை அடித்து நொறுக்கிய எம்.எல்.ஏ. உறவினர்

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் ரமேஷ் யாதவ் சட்டசபையில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராகவும் இருக்கிறார். இவரது உறவினர் மோகித் யாதவ்.

இவர் இட்டா நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெறச் சென்றார். தான் எம்.எம்.ஏ.வின் உறவினர் என்பதால் தனக்கு வி.ஐ.பி. அந்தஸ்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கூறினார். அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மோகித் யாதவ் ஆஸ்பத்திரி ஊழியர்களை தாக்கினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மோகித் யாதவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர் ஜிதேந்திரகுமார் அவரிடம் விசாரணை நடத்தினார்.

சப்-இன்ஸ்பெக்டர் அவரிடம் உன் பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர் என் பெயர் மோகித் யாதவ் என்று கூறியவாறே இன்ஸ்பெக்டரை கன்னத்தில் ஓங்கி அறைவிட்டார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வாலிபர் மோகித் யாதவை கைது செய்து லாக்கப்பில் அடைத்தனர்.

அவர் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறையும் காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவானது. அந்த காட்சி உள்ளூர் தொலைக்காட்சியிலும் சமூக வளைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து சமாஜ்வாடி கட்சிக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்சியை இழந்து பதவியில் இல்லாத போதே சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியவர்கள் ஆட்சியில் இருந்த போது எப்படியெல்லாம் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி ரமேஷ்யாதவ் கூறும் போது இந்த சம்பவம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

Comments

comments