சென்னை: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: புதிதாக ஐந்து உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தை (டிஎன்பிஎஸ்சி) அதிமுக அம்மா அணியின் தலைமைக் கழகமாக மாற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்திருப்பது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளுக்கு முற்றிலும் முரணாகவும் எதிராகவும் அமைந்திருக்கிறது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசுப் பணிகளுக்கு திறமை மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மை உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, நேர்மையானவர்களும், அப்பழுக்கற்றவர்களும் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் நிரம்பியிருக்க வேண்டிய மிக உயரிய -முக்கியமான அரசியல் சட்ட அமைப்பு.

ஏனென்றால் கோடிக்கணக்கான ஏழை எளிய இளைஞர்களின் அரசு வேலை கனவு இந்த ஆணையத்தின் நேர்மைத்தன்மை மீதுதான் முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறது. கடந்த 22.12.2016 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த உறுப்பினர்களின் பட்டியலில் இருந்தே மீண்டும் ஐந்து உறுப்பினர்களை அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு நியமித்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் சட்ட விரோதமான நடவடிக்கை மட்டுமல்ல- எண்ணற்ற இளைஞர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேர்மைத்தன்மையை சூறையாடும் நடவடிக்கையுமாகும் என்பதால் பிழையான இந்த நியமனங்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சியில் ஏற்கெனவே அள்ளித்தெளித்த பாணியில் அவசர அவசரமாக 24 மணி நேரத்தில் பயோடேட்டா வாங்கி, தேர்வாணையத்திற்கு 11 உறுப்பினர்களை நியமித்தார்கள். அந்த நியமனம் செல்லாது என்று திமுக சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது.

அந்தத் தீர்ப்பில், ”மூன்று வருடங்கள் அந்த உறுப்பினர்கள் பதவி காலியாக இருந்தும், திடீரென்று 24 மணி நேரத்தில் விண்ணப்பம் வாங்கி சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்களை நியமித்துள்ளார்கள். சனிக்கிழமையான 30.1.2016 அன்று தேர்வு நடைமுறைகளைத் துவங்கி 31.1.2016 அன்று- அதுவும் அரசு வேலை நாளாக இல்லாத ஞாயிற்றுக் கிழமையன்று 11 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட நீதிபதி ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  உப்பு முதல் உல்லாச வாழ்க்கை வரை... நீங்கள் எவ்வளவு வரி கட்டணும் என்பது இன்று தெரியும்

‘சாலில் சப்லோக்’ வழக்கில் வழக்கறிஞருக்கு நிர்வாக அனுபவம் இருக்காது என்று கூறப்பட்டிருப்பதையும் புறக்கணித்து வழக்கறிஞர்கள் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்” என்று சுட்டிக்காட்டி விட்டு, ”உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் ஏதும் கோரப்படவில்லை. தேர்வு நடைமுறையே கடைபிடிக்கப்படவில்லை. உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்று எழுத்து பூர்வமான அலுவலகக் குறிப்பு இல்லை.

எல்லாமே வாய் மொழியாக நடந்திருக்கிறது. வெறும் பயோடேட்டாவை அடிப்படையாக வைத்து ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று பல்வேறு கண்டனக் கனைகளுடன் அதிமுக அரசுக்குக் கடுமையாகக் குட்டு வைத்த சென்னை உயர் நீதிமன்றம், 11 சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் நியமனத்தையும் ரத்து செய்தது.

தேர்வு நடைமுறை இல்லை என்பதால் எங்கள் பார்வையில் இது நியமனமே அல்ல என்று அதிமுக அரசு வெட்கித் தலைகுனியும் அளவிற்கு அந்தத் தீர்ப்பில் கூர்மையான கேள்வி எழுப்பியது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் அந்தத் தீர்ப்பின் 99-வது பக்கத்தில் எதிர்காலத்தில் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து அம்சங்கள் பற்றி விளக்கியிருக்கிறது.

அவற்றுள், அரசியல் சட்டத்தின் கீழ் உறுப்பினர் நியமனம் நடைபெறுவதால், அந்த உறுப்பினர்கள் நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக, தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும். திறமையானவர்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு வசதியாக சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் நியமிக்கப்படுவது குறித்து தகவல் பொது களத்தில் (public domain) தெரிவிக்கப்பட வேண்டும்.

உறுப்பினராக நியமிக்கப்படுபவரின் நன்னடத்தை, அவரின் கடந்த கால நடத்தை போன்றவற்றை மிகவும் கவனமாக விசாரித்து, பரிசீலனை செய்ய வேண்டும். உறுப்பினர் நியமனத்தில் அர்த்தமுள்ள, விரிவான ஆக்கபூர்வமான ஆலோசனை நடைபெற வேண்டும். அரசியல் சட்டம், அரசியல் சட்ட அமைப்பான சர்வீஸ் கமிஷனில் உறுப்பினராகும் நபர்களுக்கு உள்ள நேர்மை போன்றவற்றை மனதில் கொண்டு நியமனங்களை செய்ய வேண்டும்.

மிக முக்கிய அம்சங்களை கோடிட்டுக் காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், இனி வரும் காலங்களில் இந்த அம்சங்களை கடைப்பிடிக்காமல் சர்வீஸ் கமிஷன் உறுப்பினர் நியமனங்கள் நடைபெற்றால் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துக் கொடுத்துள்ள அரசியல் சட்டப்படியான பதவிகளுக்கு உள்ள வெளிப்படையான தேர்வு முறையை மீறிய செயலாகவும், அரசு பணியாளர் தேர்வாணையத்தின் நேர்மைத்தன்மைக்கே குந்தகம் விளைவிப்பதாகவும் கருதப்படும் என்று ஆழ்ந்த பொருளுடன் கடுமையாக எச்சரித்துள்ளது.

அதிகம் படித்தவை:  மாலை நேரத்து மயக்கம் விமர்சனம் | Maalai Nerathu Mayakkam Review

ஆனால் அதிமுக அம்மா அணி ஆட்சியின் சார்பில் இப்போது நியமிக்கப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்களில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, செய்தித் துறையில் இருந்து அதிமுக அரசுக்காக விதவிதமான விளம்பர யுக்திகளை கடைப்பிடித்து, கோப்புகளை நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போட்டு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு தேர்தல் பணிகளைச் செய்தவர்.

இன்னொருவர் மிகப்பெரும் ஊழல் மின்வாரியத்தில் நடைபெற்றது என்று கூறி தலைமைச் செயலாளர் போன்றவர்கள் எல்லாம் சஸ்பென்ட் செய்யப்பட்ட தமிழக அரசின் மின் வாரியத்தில் தலைமைப் பொறியாளராக இருந்தவர். வேறு மூன்று பேரில் இருவர் வழக்கறிஞர்கள். ஒருவர் பொறியாளர். இந்த ஐந்து உறுப்பினர்கள் நியமனமும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கிறது.

அது மட்டுமின்றி, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை, நேர்மைத்தன்மை, சுதந்திரமான செயல்பாடு போன்றவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டவர்களை நியமித்திருப்பது மிகுந்த கவலையளிப்பதோடு மட்டுமின்றி, ஆளுநர் இதற்கு எப்படி ஒப்புதல் அளித்தார் என்ற ஐயம் பிறக்கிறது.

11 பேரை நியமித்த வழக்கிலேயே, இவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் நேரத்தில் இதில் தேர்வு நடைமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பதை ஆளுநர் பார்க்கத் தவறி விட்டார் என்றே சுட்டிக்காட்டப்பட்டுள்ள நேரத்தில், உயர் நீதிமன்றம் ரத்து செய்த அதே உறுப்பினர்களை இரண்டாம் முறையாக நியமிக்க ஆளுநர் எப்படி அனுமதி வழங்கினார் என்பது வியப்பாக இருக்கிறது.

ஆகவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக நடைபெற்றுள்ள ஐந்து உறுப்பினர்கள் நியமனத்தையும் ஆளுநர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

22.12.2016 அன்றைய சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனங்களை செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்.

கோடிக்கணக்கான தமிழக இளைஞர்களின் கனவாகத் திகழும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேர்மைத்தன்மையையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆணையம் ஆளுங்கட்சியினர் ஆக்கிரமிக்கும் இடங்களாக தயவு செய்து தேர்வாணையத்தை மாற்றி விடாதீர்கள் என்றும் அதிமுக அரசுக்கு எச்சரிக்க விரும்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.