தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால்,தமிழகமே சுடுகாடாகிவிடும் என பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இளைஞர்கள், டாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் களத்தில் குதித்துள்ளனர். வரும் மார்ச் 1 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அது மட்டுமல்ல இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடங்கியுள்ளது. நடிகர் கமலஹாசன், இயக்குநார்கள் தங்கர்பச்சான், பாண்டிராஜன் உள்ளிட்டோரும் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் இப்பிரச்சனை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் டெல்லிக்கு பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றிருக்கும் நிதி அமைச்சர் ஜெயகுமார், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயகுமாரின் இந்த பேச்சு தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.