fbpx
Connect with us

Cinemapettai

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. நாளை முதல் அமலுக்கு வருகிறது

Tamil Nadu | தமிழ் நாடு

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. நாளை முதல் அமலுக்கு வருகிறது

தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன்படி பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடு பொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளன என்று தெரிவித்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கான பால் பணப்பட்டுவாடா எவ்விதத்திலும் பாதிப்படையக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும், நுகர்வோர்களுக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையிலும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பதப்படுத்தும் செலவு, போக்குவரத்து மற்றும் அலுவலகச்செலவு ஆகியவை கணிசமாக உயர்ந்துள்ளதாலும், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படும்.

இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு 19.8.2019 (நாளை) முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

தமிழக அரசு இதற்கு முன்பு கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை உயர்த்தியது. அப்போது பச்சை, நீலம், ஆரஞ்சு, மெஜந்தா நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது.

நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.34, சில்லரை விற்பனை ரூ.37 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.39 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.41 ஆகவும் இருந்தது. ஆரஞ்சு (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.43 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.45 ஆகவும் இருந்தது. மெஜந்தா (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.35 ஆக இருந்தது.

5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டு இருக்கிறது. நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) ஒரு லிட்டர் பால் அட்டைக்கு ரூ.40 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.43 ஆகவும், பச்சை (சமன்படுத்தப்பட்டது) பால் அட்டைக்கு ரூ.45 ஆகவும், சில்லரை விற்பனை ரூ.47 ஆகவும் உயர்ந்து உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top