மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சில வரலாற்று அரசியல் தலைவர்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் ஒருவர். ஒரு நடிகராக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அவர் பின்னாளில் மக்கள் போற்றும் ஒரு நாயகனாக உருவெடுத்தார்.
இவரைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது எம்ஜிஆர் சமநீதி என்னும் பத்திரிக்கையை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதில் அவர் என் காதலி என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி வந்தார்.
அன்றைய காலகட்டத்தில் அந்த கட்டுரை அனைவராலும் ரசிக்கப்பட்டு விரும்பப்பட்டது. எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள் அந்தக் கட்டுரையை விடாது படித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் அதுகுறித்த ஒரு சந்தேகமும் அவர்களுக்கு அப்போது இருந்தது.
அது என்னவென்றால் அந்த கட்டுரை எதை மையப்படுத்தி எழுதப்பட்டது என்ற கேள்விதான் அது. சில பத்திரிகையாளர்களால் இந்தக் கேள்வி எம்ஜிஆரிடம் கேட்கப்பட்டது. அதற்கு எம்ஜிஆர் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு ஆச்சரியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது நான் என்னுடைய இளம் வயதில் ஒரு பெண்ணை காதலித்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த காதலும் நிறைவேறவில்லை என்னுடைய இந்த கட்டுரையும் முழுவதுமாக முடிவு பெறவில்லை என்று வருத்தமாக கூறியிருக்கிறார்.
இதைக்கேட்ட அப்போதைய அவருடைய ரசிகர்கள் எம்ஜிஆருக்கும் ஒரு காதல் வந்து சென்றதா என்று ஆச்சரியப்பட்டு போனார்கள். அதுசரி இந்த காதல் யாரை தான் விட்டு வைத்திருக்கிறது. தற்போது எம்ஜிஆர் கூறிய இந்த காதல் செய்தி அனைவருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.